கரூரை ஒட்டிய அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் போன்ற பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பிராதனப் பயிர்களில் கண்வலிக்கிழங்குக்கு முக்கிய இடம் உண்டு. கிழங்கிலிருந்து வளரும் இப்பயிரில்தான் தமிழகத்தின் தேசிய மலரான செங்காந்தள் மலர் பூக்கிறது. இச்செடியில் இருந்து கிடைக்கும் விதைகளில் அதிக மருத்துவப்பலன்கள் மிகுந்திருப்பதால், அந்த விதைகள் நல்ல விலைக்கு விற்பனை ஆகின்றன. அந்த விதைகளை மகசூலாக பெறவே கண்வலிக்கிழங்கு விவசாய நிலத்தில் பிரதான பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் கண்வலிக்கிழங்கு அமோகமாக பயிரிடப்படும் பகுதிகளில் பெத்தான்கோட்டை கிராமமும் ஒன்று. அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட இந்தக் கிராமத்தில், பல விவசாயிகளுக்கு கண்வலிக்கிழங்குதான் முக்கியமான பணப்பயிர். இத்தகைய கிராமத்தில் முத்துவேல் சபாபதி என்ற விவசாயி கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து கண்வலிக்கிழங்கை பயிரிட்டு வருகிறார். அவரது விவசாய அனுபவம் குறித்து அறிந்துகொள்ள பெத்தான்கோட்டைக்கு பயணமானோம். நிலத்தில் பராமரிப்பு பணியில் பிசியாக இருந்தவர் நமது வருகையைக் கண்டதும் வரவேற்றுப் பேசத்தொடங்கினார்.
``முருங்கை சாகுபடி, கண்வலிக்கிழங்கு சாகுபடி, செம்மறி ஆடு வளர்ப்பு... இது மூன்றும்தான் எங்கள் ஊரின் பிரதான தொழில். 40 முதல் 50 வீடுகள் மட்டுமே உள்ள இக்கிராமத்தில் 8 பேர் இந்த கண்வலிக்கிழங்கை சாகுபடி செய்திருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார். ``எங்களுக்கு பாரம்பரிய தொழிலே விவசாயம்தான். 1990ல் இருந்து அப்பா இந்தக் கண்வலிக்கிழங்கை சாகுபடி செய்து வருகிறார். கடந்த பத்து ஆண்டுகளாக நானும் அவருக்கு துணையாக இருந்து வருகிறேன். விவசாயம் தவிர்த்து வேறு சில தொழில்களும் செய்து வருகிறோம்.
கண்வலி கிழங்கு எங்கள் பகுதியில் நன்றாக வரும். அதற்கு காரணம், எங்கள் பகுதியின் மண்வளம்தான். ஆம். எங்கள் பகுதியில் மண்ணிற்கு கீழே ஓடை ஜல்லி அதிகமாக இருக்கும். அது அதிகமாக இருப்பதால், இயற்கையாகவே எங்கள் பகுதி மண்ணில் சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருக்கிறது. சுண்ணாம்பு சத்து அதிகமுள்ள மண்ணில்தான் கண்வலிக்கிழங்கு வளரும் என்பதால், எங்கள் பகுதி விவசாயிகள் இதை ஆர்வமாக பயிரிடுகிறார்கள். கண்வலிக்கிழங்கு ஒரு பணப்பயிர் மட்டுமல்ல. பணம் அதிகம் தேவைப் படும் பயிரும் கூட. ஆம்... இதனை விவசாயம் செய்ய அதிகளவு பணம் தேவைப்படும். அதனால், மிகச்சிலரே இக்கிழங்கை விவசாயம் செய்வார்கள். நான் இந்தக் கிழங்கை நான்கு ஏக்கரில் சாகுபடி செய்து வருகிறேன். ஒருமுறை நட்டு வைத்தால் வருடம் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் பலன் அளிக்காது. அதாவது, இக்கிழங்கை நட்ட பிறகு, அதிலிருந்து மகசூலாக கிடைப்பது அதன் காய்கள்தான். ஒருமுறை நடவு செய்தால் காலம் முழுவதும் செடி வளருமே தவிர, காய்கள் காய்க்காது. மூன்று முதல் நான்கு வருடங்கள் மட்டுமே காய் கொடுக்கும். அதன்பின், இக்கிழங்கை பிடுங்கி எறிந்துவிட்டு, மீண்டும் வேறு கிழங்குதான் நட வேண்டும்.
ஒரு ஏக்கரில் இந்தக் கிழங்கை பயிரிடுவதற்கு சராசரியாக 750 கிலோ விதைக்கிழங்குகள் தேவைப்படும். தற்போது, ஒரு கிலோ விதைக்கிழங்கு ரூ.400க்கு விற்பனையாகிறது. அந்த வகையில் ஒரு ஏக்கருக்கு விதைக்கிழங்கிற்கு மட்டுமே 3 லட்சம் வரை செலவாகும். முதலில், இக்கிழங்கை பயிரிடும் நிலத்தை நன்கு உழுது சமன் செய்ய வேண்டும். அதன்பின், வாய்க்கால் வாய்க்காலாக பிரிக்க வேண்டும். பின், அந்த வாய்க்காலின் நடுவே இக்கிழங்கை நட வேண்டும். ஒரு கிழங்கிற்கும் அடுத்த கிழங்கிற்கும் இடையே குறைந்தளவு இடைவெளி இருந்தாலே போதுமானது. அதேபோல, ஒரு வரிசைக்கும் அடுத்த வரிசைக்கும் இடையே 5 முதல் 7 அடி இடைவெளி இருக்க வேண்டும். இந்த முறையில்தான் நான் கிழங்கை நட்டேன்.
கிழங்கு நடவு முடிந்தபின் அடுத்த நாளில் சொட்டுநீர்ப் பாசன முறையில் நீர் கொடுக்க வேண்டும். அதன்பின், அடிஉரமாக தொழுஉரம் கொடுக்க வேண்டும். பிறகு மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் கொடுக்க வேண்டும். இப்படி வளர்கிற பயிரானது, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பந்தலில் படருமளவு வளர்ந்துவிடும். அந்த நேரத்தில் கம்பிகள் மூலம் பந்தல் அமைத்து ஒவ்வொரு கிழங்கின் கொடியையும் பந்தலில் ஏற்ற வேண்டும். அடுத்த இரண்டு மாதங்களில் பந்தலில் நன்கு படர்ந்து வளரும். பின், இரண்டு மாதம் கழித்து பூ பூக்கத் தொடங்கிவிடும். அந்தப்பூவில் இருந்துதான் காய்கள் காய்க்கத் தொடங்கும். அதாவது, வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூ பூத்து அதிலிருந்து காய்கள் காய்க்கத் தொடங்கும். அந்தக் காய்களை நாம் அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டும். அதன்பின், இந்தக் கொடிகளை நீக்கிவிட வேண்டும். பின், அடுத்த வருடத்தில் கிழங்கிலிருந்து மீண்டும் இந்தப் பயிர் வளரத் தொடங்கி மீண்டும் பூ வைத்து காய்கள் காய்க்கத் தொடங்கும். இந்த முறையில் தொடர்ந்து நான்கு வருடங்கள் வரை மகசூல் எடுக்கலாம். அதன்பின்னும் செடி வளரும். ஆனால், காய்கள் கிடைக்காது.
ஒரு வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு சராசரியாக 220 கிலோ விதை கிடைக்கும். தற்போதைய விலையின்படி ஒரு கிலோ விதை ஐயாயிரத்திற்கு விற்பனை ஆகிறது. அந்த வகையில், ஒரு ஏக்கருக்கு வருமானமாக 11 லட்ச ரூபாய் கிடைக்கும். இதில், செலவு என பார்த்தால் விதைக்கிழங்குதான். ஒரு ஏக்கருக்கு 3 லட்சம் செலவாகும். அதுபோல, ஒரு ஏக்கருக்கு உரம் செலவு மட்டுமே60 ஆயிரம் செலவு ஆகும். அதுபோக, கம்பி பந்தல் அமைப்பது, ஆட்கூலி என ஒரு வருடத்திற்கு சராசரியாக 8 லட்சம் வரை செலவாகும். இந்தச் செலவு முதல் வருடத்திற்கு மட்டுமே. அடுத்தடுத்த வருடங்களுக்கு வேலை ஆட்கள் கூலியும் உரச்செலவு மட்டுமே இருப்பதால் நல்ல லாபம் எடுக்கலாம். அதேபோல, ஒரு கிலோ விதை ரூ.5 ஆயிரம் என்பது இப்போதைய விலைதான். கடந்த வருடம் 3 ஆயிரம் எனவும், அதற்கு முந்தைய வருடம் 2 ஆயிரம் எனவும் இருந்தது. சராசரியாக ஒரு கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையானால், நிச்சமாக லாபல் கிடைக்கும்’’ என்கிறார் முத்துவேல் சபாபதி.
தொடர்புக்கு:
முத்துவேல் சபாபதி: 97891 11070.




