Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் வரும் 20ஆம் தேதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் வரும் 20ஆம் தேதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (05.02.2026) திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வரும் கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தின் இறுதிக் கட்டப் பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னை வளர்ச்சி திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை தன் சிந்தனையில் உதித்திட்ட அந்த திட்டமானது 1000 கோடி ரூபாயில் தொடங்கும் என்று அறிவித்து, இன்றைக்கு ரூ.6,000 கோடி தாண்டி இந்தத் திட்டம் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக மருத்துவமனைகள், மருத்துவமனைகளுக்கு தேவைப்படுகின்ற உபகரணங்கள், அடுத்தப்படியாக கல்விக்கு காமராஜர், பக்தவச்சலம் போன்ற பெரியவர்கள் காலத்தில் கட்டிய பள்ளி, கல்லூரிகளை புதுப்பித்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக அந்த பள்ளிகளை உருவாக்குகின்ற நோக்கம். அதேபோல் மனிதனுடைய உடல் நலத்தில் அக்கறை கொண்டு உடற்பயிற்சி கூடங்கள் இதுபோன்ற விளையாட்டு திடல்கள்,

மட்டுமல்லாமல் போக்குவரத்து கழகம் ஆரம்பிக்கப்பட்டு வந்த காலங்களில் கட்டப்பட்ட பேருந்து நிலையங்களை மறுகட்டுமானம் செய்து நவீன வசதிகளுடன் பேருந்து நிலையங்களை உருவாக்குதல். குறிப்பாக தமிழக முதல்வர் அவர்களின் சிந்தையில் உதித்திட்ட முதல்வர் படைப்பகம் சிஎம்டிஏ சார்பில் சென்னையில் 22 இடங்களில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் மூன்று முதல்வர் படைப்பகங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாத இறுதிக்குள்ளாக குறைந்தபட்சம் 10லிருந்து 15 முதல்வர் படைப்பகங்கள் மாணவ செல்வங்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கி, மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க இருக்கின்றோம்.

அதே போல் சலவைக் கூடங்கள், நாம் வெள்ளையாக உடை அணிவதற்கு காரணமாக இருக்கின்ற சலவை நிலையங்களை நவீன சமுதாயப்படுத்தி உடல் உழைப்பு தங்களுடைய வேர்வையை இரத்தமாக சிந்தி நம்மை தூய்மையாக்குகின்ற அந்த தூய்மை பணியாளர்களுக்கு இந்த நவீன உலகத்திற்கு ஏற்றார் போல் அனைத்து வகையான எந்திரங்களுடன் கூடிய நவீன சலவை கூடங்களை மறுக்கட்டுமாணம் செய்து அவர்களுக்கு அந்த சலவை செய்வதற்கு சுலபமான வழிகளை மேற்கொள்வதற்கு சேத்துப்பட்டிலும் மற்றும் புரசைவாக்கத்திலும் கட்டப்பட்டு வருகின்றன.

கன்னிகாபுரம் விளையாட்டுத் திடல் பொறுத்தளவில் 3.75 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த விளையாட்டு அரங்கத்தில் குறிப்பாக வறுமைகோட்டிற்கு கீழேயும் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கின்ற மக்களும் உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை கடத்திச் செல்கின்ற மக்களும் நிறைந்த பகுதி என்பதால் இந்த பகுதியில் இருக்கின்ற மேயர், இந்த பகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர், இந்த பகுதியினுடைய பகுதி கழகச் செயலாளர், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களும் தொடர் வற்புறுத்தல் காரணமாக இந்த பகுதியில் ஒரு பெரிய விளையாட்டு திடலை இன்றைக்கு அமைத்திருக்கின்றோம்.

இந்த விளையாட்டு திடலில் குத்துச்சண்டை பயிற்சிக்குண்டான களம், டென்னிஸ் விளையாடுவதற்குண்டான களம், பேட்மிட்டன் விளையாடுவதற்குண்டான களம், செஸ் விளையாடுவதற்குண்டான களம், கேரம்போர்டு விளையாடுவதற்கான களம், நடைபயிற்சி செல்வர்களுக்குண்டான களம், புட்பால் விளையாடுவதற்கான களம், உடற்பயிற்சி செய்வதற்கு இன்றைய நவீன உடற்பயிற்சி கருவிகளை கொண்ட உடற்பயிற்சி கூடம், சிறுவர்கள் விளையாடுவதற்குண்டான பகுதி, சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய ஒரு களம், அப்படி விளையாட்டு துறைக்கு நீச்சல் குளத்தை தவிர்த்து அனைத்து வகையான விளையாட்டு பயிற்சிக்கும் விளையாடுவதற்குண்டான களத்தை முதல்வர் அமைப்பதற்கு உத்தரவிட்டு அந்த பணிகள் 12 கோடி ரூபாய் செலவில் நடந்து கொண்டிருக்கின்றது.

இதேபோல் இதற்கு இணையாக ஆர்.கே. நகர் தொகுதியிலும் ஒரு விளையாட்டு மைதானம் மிகப்பெரிய அளவில் அந்த மக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த மாதிரி மைதானங்கள் அமைகின்ற பகுதிகளை பார்த்தால் முக்கியமாக வறுமை கோட்டிற்கும் பொருளாதாரத்திலும் பின்தங்கி இருக்கின்ற மக்கள் அதிக அளவு வசிக்கின்ற பகுதிகளில்தான் இந்த பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதிலிருந்து இந்த ஆட்சி, எங்கு ஆட்சியினுடைய கரங்கள், கருணை நீலப்படுகின்றது என்றால் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கின்ற மக்களுடைய வாழ்வாதாரத்தை சிறக்க செய்வதற்காக முதல்வரின் கரங்கள் நீளுவது என்பதற்கு இந்த ஸ்டேடியமே ஒரு உதாரணம்.

இதற்கு முழுநேரம் தங்களுடைய நேரத்தை செலவு செய்து இதற்கான திட்டப்பணிகளை திட்டமிட்டு கிட்டத்தட்ட 10 தடவைக்கு மேலாக இந்த பகுதிக்கு ஆய்வு மேற்கொண்ட எங்கள் துறையினுடைய செயலாளர் அன்பிற்கினிய காகர்லா உஷா அவர்களும், எங்கள் துறையினுடைய உறுப்பினர் செயலர் அன்பிற்கினிய பிரகாஷ் அவர்களும், சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் அன்பிற்கினிய குமரகுருபரன் அவர்களுக்கும், இந்த வட்டார துணை ஆணையாளர் அன்பிற்கினிய கௌஷிக் அவர்களுக்கும், எங்களுடைய மண்டல குழுத் தலைவர் சரிதா அவர்களுக்கும் வட்டச் செயலாளர்கள் டீக்கா மற்றும் அபோய் அவர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் ஊடகத்துறையினர்களுக்கும் நன்றி. இந்த விளையாட்டு மைதானம் இம்மாதம் 20ஆம் தேதிக்குள் விளையாட்டு வீரர்களுடைய பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் என்பது மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் தலை குனியாது என்ற பிரச்சார முன்னெடுப்பை எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் குறித்த செய்தியாளர் கேள்விக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களின் பதில்: தொங்கிய தலை அவர் (எடப்பாடி பழனிசாமி) தலை தான். எங்கள் தலை நிமிர்ந்த தலை. அவர் கண்ட தேர்தல் எல்லாம் தோல்வியை கண்டவர், அவர் திராவிட முன்னேற்ற கழகத்தைப் பற்றி குற்றம் சாட்டுவதற்கோ குறை சொல்வதற்கோ அருகதை இல்லை. நாள் ஒரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அங்கே இருப்பவர்கள் கரைந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். முதல்வர் எங்கள் உயிரிலும் மேலான தலைவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து இந்த இயக்கத்தின் நிறுவர்னக்கொடி உயர்ந்து கொண்டே இருக்கின்றது.

அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டிருக்கின்ற அந்த இயக்கம் அண்ணாவை சாடுகின்ற பொழுது வாய்மூடி மௌனியாக இருக்கின்றார்கள். அந்த இயக்கத்தினுடைய நிறுவனத் தலைவர் எம்ஜிஆரை சாடுகின்ற பொழுது வாய்மூடி மௌனியாக இருக்கிறார்கள். ஏன் அந்த இயக்கத்தை 20 ஆண்டுகாலம் கட்டமைத்த முன்னாள் முதலமைச்சர் அம்மையாருடைய பெயரை உதாசீதனப்படுத்தி அவரை அவமானப்படுத்தி பேசுகின்ற பொழுது வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள். எங்கள் இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம், ராணுவ கட்டுப்பாடோடு எங்கள் தளபதி இந்தியாவினுடைய உயர்ந்த மனிதரான இரும்பு மனிதர் என்று போற்றப்படுகின்ற சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு நிகராக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்.

எந்த விதமான செயலுக்கும் எந்த விதமான எதிர்ப்புக்கும் அஞ்சாமல் நின்று கட்சிப் பணியும், இயக்கப் பணியும், ஆட்சிப் பணியும் ஒரு சேர நடந்து கொண்டிருக்கின்ற இந்த தலை நிமிர்ந்து இருக்கின்றதா, அவர்களுடைய தலைவர்களை கொச்சைப் படுத்தி அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு இருக்கின்ற அவர் தலை நிமிர்ந்து இருக்கின்றதா என்பதை ஊடகத்தினருக்கு நான் அந்த கேள்வியை கேட்கிறேன். கிளாம்பாக்கம் ரயில்வே பணிகள் குறித்த செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் அவர்களின் பதில்: கிளாம்பாக்கம் நடைமேம்பாலம் பொறுத்தளவில் எங்களுடைய உறுப்பினர் செயலாளர் பிரகாஷ் நேரடி கண்காணிப்பில் அதைத்தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்.

ஏப்ரல் மாத இறுதிக்குள் அந்த மேம்பால பணிகள் என்ன நாங்கள் வடிவமைத்தோமோ, என்ன திட்டமிடலோடு அந்த பணிகள் துவக்கினோமோ அந்த திட்டமிடலுக்கு மேலாக நேர்த்தியாக அந்த கிளாம்பாக்கம் மேம்பால பணிகள் நிறைவு பெறும். அதோடு தென்னக ரயில்வேக்கு நாங்கள் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு நாங்கள் அளித்து இருக்கின்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உடைய அந்த தொகையும் முழுமையாக பயன்படுத்தப்பட்டு, அதுவும் ஓரிரு மாதங்களில் கிளாம்பாக்கம் ரயில் நிலையமும் பயன்பாட்டிற்கு வரும். இதற்கெல்லாம் காரணம் கடந்த ஆட்சி காலத்தில் திட்டமிடல் இல்லாததால் அந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கியதால் தொடர் பணிகள்,

மழை என வந்தாலும் தாங்கள் அதை எதிர்கொண்டு அனைத்து பணிகளையும் மக்களோடு தேவைகளுக்கு ஏற்ப நிறைவு செய்வதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துரிதப்பட்டு இருக்கின்றது. இந்த அதிகால வேளையில் ஆய்வு வருவதற்கு, வருவதிலிருந்து நீங்கள் இந்த துறையை எடை போட்டுக் கொண்டிருக்கலாம். இந்த துறை மட்டுமல்லாமல் மாண்புமிகு முதல்வரின் தலைமையில் இயங்குகின்ற அனைத்து துறைகளும் 24 மணி நேரமும் விழிப்போடு இருக்கிறோம் என்று எடப்பாடிக்கு கேள்வி கேட்ட நண்பர் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்கிறோம்.

நெல்லையப்பர் கோயில் குறித்த செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் அவர்களின் பதில்: நெல்லையப்பர் கோயில் குறித்த சம்பவம் விளக்கமாக இணை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார். எங்காவது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்குமா என்று பூதக்கண்ணாடியை வைத்து தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு அதை ஒரு பிரச்சனை ஆக்க நினைக்கின்றார். அங்கு நடந்த சம்பவத்தில் யாரும் அவமானப்படுத்தப்படவில்லை, அவமதிக்கப்படவில்லை, நேர்த்தியாக உயர்தர உணவு தான் பரிமாறப்பட்டது. உணவு விருந்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதற்குண்டான புகைப்படங்கள் வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அரசியலுக்காக பேசுபவர்களை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தவறுகள் எங்கு நடந்தாலும் அதை திருத்திக் கொள்கிறோம்.

இதே போல் ஒரு பிரச்சனை மகாபலிபுரத்தில் எழுந்தது அடுத்த நாளே முதல்வர் நேரடியாக சென்று அந்த தங்கையோடு உட்கார்ந்து உணவு அருந்த சொன்னார். முதல்வர் நேரடியாக சென்று அவர்களுக்கு வீடு வழங்கிய சம்பவம் உங்கள் நினைவிற்கு இருக்கும். ஆகவே இந்த ஆட்சி எல்லோருக்கும் எல்லா விதமான ஆட்சி, எங்கும் தீங்குக்கும், தவறுக்கும் இடமில்லை, அப்படி ஏதாவது நடைபெற்றால் உடனடியாக அந்த தவறுக்கு பரிகாரம் காணுகின்ற ஆட்சி, குறைகளை சுட்டி காட்டினால் அதை நிறைவு செய்கின்ற ஆட்சி இந்த ஆட்சி. இவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது சிஎம்டிஏ உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், சிஎம்டிஏ மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி, கண்காணிப்புப் பொறியாளர் ராஜன்பாபு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் எல்.சுஜாதா, உள்ளாட்சி பிரதிநிதிகள் தமிழ்வேந்தன், எம்.ஏ.டீக்கா, எம்.இசட்.அபோய், மாமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.