Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சிபுரத்தில் பராமரிப்பில்லாமல் காணப்படும் ஒக்கப்பிறந்தான் குளத்தை சீரமைத்து படகு குழாம் அமைக்க வேண்டும்: மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையத்தில் பாழடைந்து வரும் ஒக்கப்பிறந்தான் குளம் மற்றும் குளக்கரை பூங்காவை சீரமைத்து படகு குழாம் அமைத்து சுற்றுலா மையமாக மேம்படுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரத்தின் மையப் பகுதியான பேருந்து நிலையம் அருகில் ஒக்கப்பிறந்தான் குளம் உள்ளது. காஞ்சிபுரத்தின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக விளங்கிய இந்தக்குளம் நாளடைவில் கழிவுநீர் விடப்பட்டதால் குட்டையாக மாறியது.

இதனால், மழைக்காலங்களில் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி வாசிகள், துர்நாற்றத்தில் அவதிப்பட்டு வந்தனர். எனவே, இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில், கடந்த 2011ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தின்போது, அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

காஞ்சிபுரம் மடம் தெரு அண்ணா நூற்றாண்டு பூங்கா ரூ.2.40 கோடி மதிப்பீட்டிலும், மஞ்சள் நீர் கால்வாயில் வெள்ள தடுப்பு சுவர், ஒக்கப்பிறந்தான் குளக்கரையில் நடைபாதை, இருக்கைகள் அமைத்தல், மின்விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட அழகுபடுத்தும் பணிக்காக ரூ.2.58 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டன. அதன் அடிப்படையில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காஞ்­சி­புரம் ஒக்­கப்­பி­றந்தான் குளத்தை சுற்றி தடுப்பு சுவர், உட்புறம் கம்பி தடுப்பு, நடை­பாதை, பொது­மக்கள் அமர்ந்து ஓய்வு எடுக்கும் வகையில் இருக்கை வசதி, கழிப்­பறை, குளத்தை சுற்றி மின் விளக்கு என, வச­திகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

மேலும் குளக்கரை பூங்கா பாதுகாப்புக்காக காவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டு இருந்தார். இதனால், குளக்கரை பூங்கா ஆரம்பத்தில் ஒளி மயமாக காட்சியளித்தது.ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து பாதுகாவலர் பணிக்கு யாரும் வராததால், குளக்­க­ரையில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதி­க­மா­னது. குளக்கரையில் மது அருந்தத் தொடங்கிய குடிமகன்கள் கழிப்பறை கதவு மற்றும் சிமெண்ட் தரையை உடைத்து போட்டனர். நடை­பா­தையில் குடித்துவிட்டு, பாட்­டிலை உடைத்து விட்டு செல்கின்றனர்.

மேலும் இந்த குளக்கரை பூங்காவில் இருந்த மின்கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால் இப்பூங்கா இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறும் இடமாக மாறிவிட்டது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மாநகர அந்தஸ்து பெற்ற காஞ்சிபுரத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் என்று பெரிதாக எதுவும் இல்லை.

எனவே இந்த ஒக்கப்பிறந்தான் குளத்தில் படகு குழாம் ஏற்படுத்தி குளக்கரைப் பூங்கா பராமரிக்கப்பட்டால் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையத் தெரு, புத்தேரி தெரு மட்டுமின்றி காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு இடமாக மாறும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் ஒக்கப்பிறந்தான் குளத்தில் படகு குழாம் அமைக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பதுடன், இந்த குளக்கரை பூங்காவை முழுமையாக சீரமைத்து, பராமரிக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.