Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு அங்காடியில் பொருட்கள் வாங்கக் குவிந்த மக்கள்: கடும் வெயிலில் காத்திருந்த பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசின் கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், ஊரகப் பகுதிகளில் உள்ள கூட்டுறவு அங்காடிகள் மூலம் 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.200-க்கும், 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100-க்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மளிகை மற்றும் காய்கறித் தொகுப்புகளை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு அங்காடியில் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர் காலை 9 மணி முதலே அங்காடிக்கு வரத் தொடங்கினர். இதன் காரணமாக கூட்டுறவு அங்காடி முன்பு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், பொதுமக்களின் வருகைக்கு ஏற்ப முறையான முன்னேற்பாடுகள் செய்யப்படாததுடன், போதிய பணியாளர்களும் இல்லாததால் பொருட்கள் விநியோகிப்பதில் கடும் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே, கடும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் வழங்கும் அளவிற்கு மளிகை மற்றும் காய்கறித் தொகுப்புகள் போதிய இருப்பில் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் அப்பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதி நகரின் முக்கிய சாலையாக இருப்பதால், அவ்வழியாகச் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு அங்காடிகள் மற்றும் நியாய விலைக் கடைகள் மூலமாகவும் இந்தத் தொகுப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய அளவில் பொருட்களை இருப்பு வைப்பதுடன், கூடுதல் பணியாளர்களை நியமித்து முறையான திட்டமிடலுடன் விநியோகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

முறையான முன்னேற்பாடுகள் இல்லாமல் திட்டம் செயல்படுத்தப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், போதிய பொருட்கள் இருப்பு இல்லாமல் அறிவிக்கப்பட்ட திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசின் அறிவிப்பின்படி பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி மளிகை மற்றும் காய்கறித் தொகுப்புகள் கிடைக்க மாவட்ட நிர்வாகமும் கூட்டுறவுத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.