Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தைப்பூச தேரோட்டத்தையொட்டி காளிப்பட்டி நாட்டு மாட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த காளிப்பட்டியில் உள்ள கந்தசாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டத்தையொட்டி ஆண்டுதோறும் நாட்டுமாட்டு சந்தை நடைபெற்று வருகிறது. கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. பல இடங்களில் மாட்டு சந்தைகள் கூடினாலும் காளிப்பட்டியில் மட்டும் தான், நாட்டு மாட்டுக்கு என தனி சந்தை கூடுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த ஆண்டு தைப்பூசத்தையொட்டி நேற்று காளிபட்டியில் மாட்டுசந்தை நடைபெற்றது.

சந்தையில் சந்தனப் பிள்ளை, மயிலை, நாட்டுக்குட்டை, தெக்கத்தி மாடு கோரப்பட்டு செவலை, கறுக்கா மயிலை, காங்கேயம் மயிலக் காளை வகை, கராம் பசு வகை, ஆலம்பாடி, வடக்கத்தி, மற்றும் நாட்டுமாடுகள் என ஆயிரக்கணக்கான மாடுகள், சுழியில்ராஜா சுழி என்ற வகை கொண்ட ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காங்கேயம் காளைகள், இடைப்பாடி பகுதியை சேர்ந்த காராம் பசு வகைகள் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்தனர். பவானி, மயிலம்பாடி பகுதியில் இருந்து காங்ககேயம் காளைகள் மற்றும் பசுக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு காளை ஜோடி ரூ.2லட்சமும், பசு மற்றும் கன்றுக்கு ஒரு லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டது. மாட்டின் பல் மற்றும் சுழி தரம் ஆகியவைகளை வைத்து விலை வைக்கப்பட்டது. இந்த ஆண்டு சுமார் ரூ. 2 கோடிக்கு மாடு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு காளைகள், வண்டி மாட்டு காளைகள், நாட்டு பசு மாடுகள், சிந்து பசுக்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. மாட்டுசந்தையையொட்டி, மாடுகளுக்கு பயன்படுத்தப்படும், தலைகயிறு முகக்கயிறு, சாட்டை, சலங்கைகள், கழுத்து மணிகள் விற்கும் கடைகளும் அதிக அளவில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.