Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலசப்பாக்கம் அருகே நீர்பிடிப்பு பகுதியில் வீட்டுமனை அமைக்க ஏரி மண் கடத்தல்?

*டிஆர்ஓ நேரில் விசாரணை

கலசப்பாக்கம் : கலசப்பாக்கம் அருகே நீர்பிடிப்பு பகுதியில் வீட்டுமனை அமைக்க ஏரி மண் கடத்தப்படுவதாக வந்த புகாரின்பேரில் டிஆர்ஓ ராம்பிரதீபன் நேரில் விசாரணை நடத்தினார்.

துரிஞ்சாபுரம் அடுத்த நாயுடுமங்கலம் ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி கோடிக்கு அருகே 80 சென்ட் நிலம் பட்டா 1970ம் ஆண்டு வழங்கப்பட்டது. தற்போது நிலத்தின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் நிலத்தை பலரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்துள்ளனர்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தை பல நபர்கள் கிரயம் செய்து வருகின்றனர். நிலத்தில் திருமண மண்டபம், வணிக வளாகம் கட்ட முயற்சி செய்து வருகின்றனர். நீர்பிடிப்பு பகுதியில் வீட்டுமனை அமைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இதற்காக கலசப்பாக்கம் தாலுகாவில் இருந்து லாரிகளில் மண் கடத்தி வந்து கொட்டி நிலத்தை உயரப்படுத்தி வருகின்றனர். நிலத்தை உயரப்படுத்தும்போது ஏரி உபரிநீர் செல்வது தடைபட்டு ஏரி உடைந்து கிராமத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி துணை சபாநாயகர் கு.பிச்சாண்டியிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிலையில், நேற்று டிஆர்ஓ ராம்பிரதீபன், ஆர்டிஓ ராஜ்குமார், கனிமவள அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நாயுடுமங்கலம் கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.அப்போது, பட்டா யார் பெயரில் வழங்கப்பட்டுள்ளது. யாருக்கு கிரயம் செய்யப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் வீட்டுமனை அமைப்பதற்காக முயற்சி செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

மேலும், கலசப்பாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட தென்பள்ளிப்பட்டு ஏரியில் இருந்து 300க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏரி மண் கடத்தப்பட்டதா அல்லது விவசாயத்திற்காக அனுமதி பெற்று ஏரி மண் கொண்டு செல்லப்பட்டுள்ளதா, கலசப்பாக்கம் தாலுகாவில் இருந்து திருவண்ணாமலை தாலுகாவிற்கு எப்படி வண்டல் மண் கடத்தப்பட்டது, இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார் என விசாரணை செய்தனர். விரைவில் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.