சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் திருவுருவச் சிலையினை நேற்று திறந்து வைத்தார். நாகர்கோவில் சுடலை முத்துகிருஷ்ணன் ஆகிய ‘என்.எஸ்.கே’ 29.11.1908 அன்று பிறந்தார். 1940களிலும், 1950களிலும் தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர், பாடகர், நாடக தயாரிப்பாளர், சினிமா தயாரிப்பாளர் என்றெல்லாம் புகழுடன் விளங்கியவர். இவரை, ‘இந்தியாவின் சார்லி சாப்ளின்’ என்றும் புகழ்வர்.
அண்ணா, கலைஞருடன் நெருங்கி பழகியவர். தியாகராய நகரில் ஜி.என்.செட்டி சாலையில் கலைவாணரின் சிலை நிறுவப்பட்டது. அந்த சிலையை அன்றைய முதல்வர் அண்ணா 14.1.1969 அன்று திறந்து வைத்தார். கலைவாணர் சிலையை திறந்து வைத்ததுதான் அண்ணா கலந்துகொண்ட கடைசி பொது நிகழ்ச்சியாகும். சென்னை அரசினர் தோட்டத்தில் இன்றைய ஓமந்தூரார் வளாகத்தில் அந்நாளில் இருந்த பாலர் அரங்கத்தை புதுப்பித்து, ‘கலைவாணர் அரங்கம்’ என அதற்கு பெயர் சூட்டியவர் கலைஞர்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை ஜி.என்.செட்டி சாலை - திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் 1999ம் ஆண்டில் மேம்பாலம் கட்டப்பட்டபோது சாலை ஓரத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது. அந்த இடத்தில் இருந்த கலைவாணரின் சிலையினை கலைவாணர் அரங்க வளாகத்தினுள் மாற்றியமைக்குமாறு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைவாணர் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, சென்னை, ஜி.என்.செட்டி சாலையில் அமைந்திருந்த சிலையை புதுப்பித்து கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என அறிவித்தார். அதன்படி சென்னை, கலைவாணர் அரங்க வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ள நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


