Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சின்னசேலம் அருகே கடத்தூர் கிராமத்தில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யும் பணி தீவிரம்

சின்னசேலம் : சின்னசேலம் அருகே கடத்தூர் கிராமத்தில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கச்சிராயபாளையம், சின்னசேலம், கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விட்டு விட்டு மழை பெய்து வந்ததன் காரணமாக கோமுகி அணையில் தொடர்ந்து அதிக அளவு நீர் தேக்கிவைக்கப்பட்டிருந்தது.

அந்த நீரை ஏரிகளுக்கும், கோமுகி ஆற்றிலும் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. இதனால் கடத்தூர், தெங்கியாநத்தம், நல்லாத்தூர், கச்சிராயபாளையம், வடக்கநந்தல் ஏரிகளில் அதிகளவு நீர் தேக்கி வைக்கப்பட்டு, பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது.

இதனால் கடத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் குறுகிய கால நெல் ரகங்களை நவரை பருவத்தில் பயிரிட்டு வந்தனர். இந்த நெல் வயல்கள் தற்போது விளைச்சல் கண்டுள்ள நிலையில் விவசாயிகள் அறுவடை செய்ய தயாரானார்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல தொழிலாளர்கள் விவசாய கூலி வேலைக்கு வருவதற்கு ஆர்வம் காட்டவில்லை.

இதனால் கடத்தூர் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக 5க்கும் மேற்பட்ட நெல் அறுவடை இயந்திரங்களை கொண்டு தீவிரமாக நெல் அறுவடை செய்து வருகின்றனர். இந்த இயந்திரங்களை பயன்படுத்தி நெல் அறுவடை செய்யும்போது நேரடியாக நெல் மூட்டை பிடித்து வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர்.

இதனால் காலநேரம் சேமிக்கப்படுவதுடன், இயந்திரங்களை பயன்படுத்துவதால் வேலை நாள் குறைக்கப்படுகிறது. இதனால் தற்போது பெரும்பாலான விவசாயிகள் இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யவே ஆர்வமாக உள்ளனர்.