கோழி வளர்க்கலாம்னு ஷெட் போட்டோம். அப்போ காடை வளர்ப்புக்கு தேவை அதிகமா இருந்ததால, அந்த ஷெட்டில் காடை வளர்க்கத் தொடங்கினோம்” எனக் காடை வளர்ப்பில் ஈடுபட வந்த கதையோடு பேச்சை ஆரம்பித்தார் முத்துக்குமார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் சேவினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர் காடை வளர்ப்பை பெரிய அளவில் செய்து வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு.“2016ல் காடை வளர்க்க ஆரம்பிச்சேன். ஆரம்பிச்ச புதுசுல 21 அடி அகலம் 140 அடி நீளம் 14 அடி உயரத்துக்கு ஷெட் போட்டு, ஆறாயிரம் காடைக் குஞ்சுகள் வாங்கி வளர்த்தோம். அதுலர்ந்து வர்ற முட்டையை ஹேட்ச்சரிகளுக்கு வித்தோம். ஏன்னா உணவுக்கு விக்கற முட்டையை விட குஞ்சு பொரிக்க விக்கற முட்டை அதிக விலைக்குப் போகும். அப்புறம் முட்டையா விக்கறதை விட குஞ்சு பொரிக்க வச்சி வித்தா கூடுதல் லாபம் கிடைகும்ன்றதால இங்குபேட்டர், ஹேட்சர் வாங்கினோம். இதுக்கு 9 லட்ச ரூபாய் செலவாச்சு. பக்கத்துல இருந்த இடத்தை குத்தகைக்கு எடுத்து அதுல ஒரு ஷெட் போட்டு இந்தக் குஞ்சு பொரிக்கும் `வசதியை உருவாக்கினோம்.
எங்க இங்குபேட்டர் அமைப்புல ஒரே நேரத்துல 60,000 முட்டைகளை வச்சி குஞ்சு பொரிக்க வைக்கலாம். முதல்ல 14 நாட்கள் இங்குபேட்டர்ல வச்சிருக்கணும். 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை, ஈரப்பதம் 80 சதவீதம் இருக்கணும். ஈரப்பதத்தைப் பராமரிக்க ஹ்யூமிடிஃபயர்ல தண்ணி ஊத்தி வைக்கணும். 14 நாட்கள் ஆன முட்டையை ஹேட்ச்சருக்கு மாத்தணும். அதுல 3 நாட்கள் வச்சிருந்தா குஞ்சு பொரிக்கும். குஞ்சு பொரிச்சதும் அதை ஹீட்டர் போட்டு கதகதப்பா வச்சிருக்கற எடத்துக்கு மாத்திடுவோம். குஞ்சு பொரிச்ச அன்னைக்கே, காடை வளர்க்கும் வாடிக்கையாளர்க்ளுக்கு வித்துடுவோம். ஒரு காடைக்குஞ்சோட விலை ரூ.7. சில குஞ்சுகளை எடுத்து முட்டை போட தாய்க்காடைகளையும் ஆண் காடைகளையும் நாங்களே வளக்கறோம்’’ என்ற முத்துக்குமார், 2020ம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று வந்தபோது காடைக்குஞ்சு விற்பனையில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், அந்த சிக்கலையும் புதிய வாய்ப்பாக மாற்றிக்கொண்டார். அதுகுறித்து அவர் கூறுகையில்,“கோவிட் டைம்ல காடைக்குஞ்சு விற்பனை ரொம்ப குறைஞ்சிடுச்சி. அப்போ, அந்த குஞ்சுகளை நாமே வளர்த்தா என்னன்னு, நானே இன்னொரு ஷெட் போட்டு பெரிய காடைகளை வளர்க்கத் தொடங்கினேன்.
தாய்க்காடைகள் ஒரு வகை, கறிக்கான காடைகள் இன்னொரு வகைன்னு ரெண்டா பிரிச்சி வளர்த்தோம். தாய்க்காடை வளார்ப்பில், 4 பெண் காடைகளுக்கு 1 ஆண் காடைன்ற கணக்குல ஒரு எடத்துல வைப்போம். இதுல வர்ற முட்டைகளை இங்குபேட்டர்ல வச்சி குஞ்சுபொரிச்சி, அதை வளர்த்து, அதில் பெட்டைகளை 60 நாட்களுக்கு வளர்த்தா அது முட்டையிடும் பருவத்துக்கு வந்துடும். ஒரு தாய்க்காடையோட விலை ரூ.70. சாப்பிடுற முட்டைக்கும் கறிக்கும் வளக்கற காடைகளை தனியா வளக்கறோம். வளக்கற இடங்கள் தனித்தனியா இருந்தாலும், வளர்ப்பு முறை, பராமரிப்பு எல்லாம் இரண்டுக்கும் ஒன்னுதான். தீவனம் வைக்கறதுல மட்டும் சின்ன மாற்றம் உண்டு. கறிக்காடை 27 நாள்ல முழுசா வளந்துடும். வளர்ந்த காடை ஒன்னு 180 கிராம் எடை இருக்கும்” என்றார்.
``தாய்க்காடைகள் குஞ்சுலர்ந்து 45வது நாள் வந்தப்புறம்தான் முடையிடத் தொடங்கும். 60 நாள்ல தினமும் முடையிடும். 7 மாசம் வரைக்கும் மாசத்துக்கு 16 முட்டையிடும். அதுக்கப்புறம் முட்டை இடும் சதவீதம் 70 சதவீதத்துக்கு கீழ போயிடும். அதுக்கப்புறம், தாய்க்காடையை கறிக்கு வித்துடுவோம். மாதாமாதம் 40,000லர்ந்து 60,000 காடைகள் வரைக்கும் வளத்து விக்கறோம். தாய்க்காடைகள் 4000 இருக்கும். ஆண் காடைகள் 1,000 இருக்கும். காடைக்குஞ்சுகள் 40,000 இருக்கும். காடை வளர்ப்பில் நல்ல தீவனத்தைக் கொடுப்பது முக்கியம். பலர் என்ன பண்ணுவாங்கன்னா, சில நாட்களுக்கு கம்பெனில வாங்குற தீவனத்தை போட்டுட்டு, அப்புறம் அவங்களே சோளம், கம்புன்னு அரைச்சு மலிவு விலை தீவனத்துக்கு மாறிடுவாங்க. இப்டிப் பண்றதால காடைகளுக்கு சரியான சத்து கிடைக்காம, வளர்ச்சி குறையும், அடிக்கடி நோய்வாய்ப்படும். நாங்க சில கம்பெனி தீவன வகைகளை போட்டுப் பார்த்து, இப்போ பெருந்துறைல இருந்து க்ரிஷின்ற கம்பெனி காடைக்காக தயாரிக்கிற தீவனத்தை வாங்கி இரையா வைக்கறோம். இதுலயும் தாய்க்காடைக்கு ’லேயர்’ன்ற வகை தீவனம் போடுறோம். கறிக்காடைக்கு “ப்ரீஸ்டார்ட்டர்”ன்ற வகை தீவனம் போடுறோம். ரெண்டாவது ஷெட்டை இரவும் பகலும் சரியான வெப்பநிலையில் வச்சிருக்கணும். அதுக்கு நைட் ஒருத்தராவது முழிச்சிருந்து சரியா பாக்கணும். தரையில அழுக்கு, கழிவு சேராம இருக்க தேங்காய்நார்ப் பொடியைத் தூவி வச்சிருப்போம். இந்தத் தேங்காய் நாரை வாரத்துக்கு ஒருமுறை பெருக்கி சுத்தப்படுத்திட்டு புது தேங்காய்நார் தூளைப் போடுவோம். இப்டிலாம் கவனமா பாத்துக்கிட்டு, கடினமா உழைச்சா காடை வளர்ப்பு லாபகரமா இருக்கும்.
நானும் என் அண்ணன் வினோத்குமாரும் இந்த பராமரிப்பை பாத்துக்கறோம். பணியாளர்கள் சிலரும் இருக்காங்க” என காடை வளர்ப்பின் நுணுக்கங்களைப் பற்றி கூறினார். விற்பனை மற்றும் வருவாய் பற்றிப் பேசிய முத்துக்குமார், “காடைக்குஞ்சுகளையும் தாய்க்காடைகளையும் இந்த மாவட்டம், பக்கத்து மாவட்டத்துல இருக்குற காடை பண்ணைகளுக்கு விக்கறோம். கறிக்காடையை உள்ளூர்ல இருக்குற கடைகளுக்கு விக்கறோம். கறிக்காடை ஒன்னு 38 லிருந்து 48 ரூபாய் வரைக்கும் விற்கும். தீவனம், மின்சாரம், பராமரிப்பு செலவெல்லாம் போக ஒரு காடைக்கு 7 ரூபாய் வரைக்கும் நிகர லாபம் கிடைக்குது. 8 வருஷத்துக்கு மேல காடை வளக்கறோம். காடை வளர்ப்பு லாபகரமா மாற ஒன்றரை ஆண்டுகள் ஆச்சு. இப்போ நல்ல லாபகரமா நடக்குது” என நிறைவாகக் கூறினார்.
தொடர்புக்கு:
முமுமுமுத்துக்குமார்: 63840 20800.


