Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கும் நீரின் அளவு 25,000 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடகா: கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கும் நீரின் அளவு 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் அணைகள் வேகமாக நிரம்புவதால் காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

தண்ணீரை நாம் கட்டுப்படுத்தி வைக்க முடியாது என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறிய அடுத்த சில நிமிடங்களில் கபினி ஆற்றில் இருந்து காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு திறக்கப்பட்டிருப்பது நம்பிக்கைக் கீற்றை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது அது வினாடிக்கு 25,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் நெருங்கும்போது மேட்டூர் அணையில் இருந்து சாகுபடிக்கு காவிரி நீர் திறக்கப்படாதா என எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருப்பார்கள். கர்நாடகாவில் வெள்ளம் ஏற்படும் சூழலில் கேட்காமலேயே காவிரி நீரை திறந்துவிடும் அம்மாநில அரசு, கொஞ்சம் மழை குறைந்தாலும் சுணக்கம் காட்டுவது வழக்கம்.

அதேபோல், தங்கள் அணைகளில் தற்போது போதிய நீர் இல்லை எனக் கூறி கர்நாடகா முரண்டு பிடித்தது. போதாக் குறைக்கு மேக தாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு தடையில்லை என மத்திய அமைச்சர் கூறியதும் டெல்டா விவசாயிகளுக்கு வேதனையை கூட்டியது. அதனால் பல்வேறு இடங்களில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவிலோ, தமிழ்நாட்டிற்கு இம்முறை தண்ணீர் திறந்துவிடக் கூடாது எனக் கூறி விவசாயிகள் தீவிர போராட்டத்தில் இறங்கினர். ஆளும் காங்கிரஸ் மட்டுமின்றி முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினரும், குமாரசாமி கட்சியினரும் ஒரே குரலில் ஒலித்து வருகின்றனர்.

இதனிடையே, காவிரி ஒழுங்காற்றுக் குழு, தமிழ்நாட்டுக்கு 15 நாட்களில் 4.5 டிஎம்சி நீரைத் திறந்துவிட வேண்டும் எனப் பணித்தது. காவிரி மேலாண் ஆணையமும், அதை ஆமோதித்து நாள்தோறும் 3,500 கன அடி நீர் வீதம், 4.5 டிஎம்சி நீரைத் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

இதை ஏற்கமறுத்த கர்நாடகா முதலமைச்சர் டிகே சிவக்குமார் மேல்முறையீடு செய்யப் போவதாக கூறினார். இதனிடையே இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஒருமித்து ஒலிக்கவில்லை என்றார். காவிரி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே திடீர் திருப்பமாக, மைசூருவில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த டி.கே. சிவக்குமார், தண்ணீரைத் திறந்து விடாமல் போனால் நம்மை அடித்துக் கொண்டு போய்விடும் எனக் கூறி விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதை சூசகமாக டிகே சிவக்குமார் கூறிய அடுத்த சில நிமிடங்களில் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துள்ளது. இந்த நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை செவ்வாய்க்கிழமைக்குள் வந்தடையும்.