பேச்சுவார்த்தைக்கு மறுத்த ஜூனியர் டாக்டர்கள் பதவி விலக தயார் மம்தா அதிரடி: மேற்கு வங்கத்தில் பரபரப்பு
இதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். நேற்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி மாலை 5 மணிக்கு முதல்வர் மம்தா வந்த நிலையில், ஜூனியர் டாக்டர்கள் குழு 25 நிமிடங்கள் தாமதமாக 5.25 மணிக்கு வந்தனர். இந்த பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமென அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். ஆனால் அரசு தரப்பில் அதற்கு சம்மதிக்கவில்லை. அதே சமயம், முழு பேச்சுவார்த்தையும் வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் ஆவணங்கள் பாதுகாக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதனை ஜூனியர் டாக்டர்கள் ஏற்கவில்லை.
இதனால் பேச்சுவார்த்தை தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரமாக முதல்வர் மம்தா காத்திருந்தார். இறுதியில் இரு தரப்பும் விட்டுக் கொடுக்காததால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
* நேரடி ஒளிபரப்பு வேண்டும்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள் கூறுகையில், ‘‘முதல்வர் மம்தாவின் கருத்து துரதிஷ்டவசமானது. எங்கள் கோரிக்கைகள் நியாயமானவை. வெளிப்படைத்தன்மைக்காக நாங்கள் நேரடி ஒளிபரப்பை கேட்கிறோம். முதல்வர் பதவி விலக வேண்டுமென நாங்கள் கேட்கவில்லை. அதற்காக இங்கு வரவில்லை. கொலையான பெண் டாக்டருக்கு நீதி வேண்டும். எனவே, எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’’ என்றனர்.