நீதிபதிகள் ஓய்வு வயது உயர்வு நிதி சுமையை காரணம் காட்டி மாநிலங்கள் எதிர்க்க முடியாது: 2 வாரத்தில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் கெடு
புதுடெல்லி: நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்துவதை, நிதி சுமையை காரணம் காட்டி மாநில அரசுகள் எதிர்ப்பதை ஏற்க முடியாதது என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகளின் ஓய்வு வயதை 60ல் இருந்து 62 ஆக உயர்த்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் நீதிபதிகளின் ஓய்வு வயதை 61 ஆக உயர்த்துவதை பரிசீலிக்குமாறு மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, ‘‘அனுபவம் வாய்ந்த திறமையான நீதிபதிகளை தொடர்ந்து பணியில் வைத்திருப்பது, அவர்கள் ஓய்வு பெறும் போது அரசுக்கு ஏற்படும் செலவை விடக் குறைவானது.
எனவே ஓய்வு வயதை அதிகரிக்க மறுப்பதற்கு மாநில அரசுகள் நிதிச் சுமையை காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல. ஆனாலும் இந்த விவகாரம் ஒருமித்த கருத்துடன் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எங்களின் உறுதியான கருத்து. இந்த விவகாரத்தில் முந்தைய கோரிக்கையை அனைத்து மாநில அரசுகளும் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துகிறோம். 2 வாரங்களில் சாத்தியமான முடிவு எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

