நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைப்பு..!
டெல்லி: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் மலையில் கல்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர இந்தியா கூட்டணி திட்டமிட்டு உள்ளது. சர்ச்சைக்குரிய திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதன்படி தீபம் ஏற்றச்சென்றபோது அங்கு பிரச்சினை ஏற்பட்டது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, நீதிபதியின் தீர்ப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இது தொடர்பாக ஆலோசனை நடத்தின. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் பேசப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவது தொடர்பான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர். திமுக, காங். கம்யூ. மற்றும் பிற மாநில கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் கையெழுத்திட்டுள்ளனர். எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் சபாநாயகரிடம் வழங்கினர்.