பத்திரிகையாளர்களை தாக்கிய பாஜவினரை கைது செய்ய வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மதிக்கப்படுகின்ற பத்திரிகையாளர்கள் தாக்கப்படும் போதெல்லாம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அந்த வகையில் எனது திருச்சி தொகுதியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் இருவர், பாஜவினரால் தாக்கப்பட்டது அறிந்து வேதனையுற்றேன். ஒன்றியத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜ கட்சியினர், பொதுக்கூட்டம் நடந்த ராணுவ மைதானத்திற்குள்ளேயே பத்திரிகையாளர்கள் இருவரை கண்மூடித்தனமாகத் தாக்கியதை கண்டிக்கின்றேன்.
பொதுவாழ்வில் ஈடுபடுகின்ற என் போன்றவர்களிடம், பலமுறை சில சிக்கலான கேள்விகளை கூட பத்திரிகை நண்பர்கள் கேட்பார்கள். அதற்கு பொறுமையாக பதில் சொல்லிவிட்டுத்தான் கடக்கின்றோம். அரசியல் பொதுவாழ்வில் உள்ள அண்ணாமலை போன்றவர்கள் பல விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அதற்கெல்லாம் யாரும் கோபம் கொள்வதில்லை. அரசியல் கட்சிகளுக்கும், கட்சித் தலைவர்கள் பலருக்கும் வேறு, வேறு பார்வை உண்டு. அப்படித்தான் ஒவ்வொரு பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும் ஒரு பார்வை உள்ளது. அந்த பார்வையில் அவர்கள் படம் எடுக்கின்ற கடமையில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இதை அமைதி வழியில் எதிர்கொள்வதை தவிர்த்து, இப்படி அராஜகமாக நடந்து கொள்வது நாகரிகமானது அல்ல. ஆகவே, இந்த வன்முறை செயலில் ஈடுபட்ட பாஜவினர் மீது, காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.