Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜெயலலிதா பிறந்தநாளில் புது அவதாரம் ‘அம்மா அதிமுக’ சசிகலா தனிக்கட்சி? டிடிவியை காலி செய்ய ‘ஸ்கெட்ச்’

திருச்சி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இம்மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 3 அல்லது 4 முனை போட்டி ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் அரசியல் ரீதியாக தங்களை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதைபோல், சசிகலாவும் தான் அரசியலில் இருப்பதாக ‘அவரே அடிக்கடி’ கூறி வருகிறார். ஆனால், அவரை யாரும் கண்டு கொள்ளாததால் அவர் விரக்தியில் உள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று வந்த பிறகு அதிமுகவில் சேருவதற்கு பல்வேறு கட்ட முயற்சிகளை சசிகலா செய்து வந்தார்.

ஆனால், சசிகலாவை அதிமுகவில் ஏற்க மாட்டோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதையடுத்து, தென் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதுவும் எடுபடவில்லை. இதனால் அரசியல் ரீதியாக என்ன செய்வதென்று தெரியாமல் சசிகலா தவித்து வருகிறார். இந்நிலையில், அதிமுக தலைமையிலான பாஜ கூட்டணியில் அமமுக இணைந்தது. இது சசிகலாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஜெயலலிதா பிறந்த நாளான பிப்.24ம் தேதி சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் ‘அம்மா அதிமுக’ என்ற பெயரில் சசிகலா தனிக்கட்சி துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அவர் தீவிரமாக செய்து வருகிறார்.

இது குறித்து சசிகலா ஆதரவாளர்கள் கூறுகையில், ‘‘அதிமுக கூட்டணில் டிடிவி தினகரன் இணைந்தது சசிகலாவிற்கு பிடிக்கவில்லை. டிடிவி தினகரனுக்கு செல்வாக்கு இல்லை, தனக்கு தான் தென் மாவட்டங்களில் செல்வாக்கு இருக்கிறது என்பதை பாஜவுக்கு காட்ட வேண்டும் என சசிகலா விரும்புகிறார். அதிமுக கூட்டணியில் அமமுக இணைந்தது, தென் மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். அவர்களை சமதானப்படுத்தும் முயற்சியில் டிடிவி தினகரன் முயற்சி செய்து வருகிறார். ஆனாலும், எடுபடவில்லை.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள சசிகலா முடிவு செய்துள்ளார். தென் மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் சசிகலா இறங்கியுள்ளார். இதற்காக கட்சி ஒன்றை ஆரம்பித்து, அதில், அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கவும் அவர் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களின் வாக்கு அதிமுகவிற்கு செல்லாது என சசிகலா அரசியல் கணக்கு போட்டுள்ளார். அனைத்து செலவுகளையும் தானே ஏற்று கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் டிடிவி தினகரனுக்கு செக் வைக்கவும், அவருடைய வாக்குகளை காலி செய்யவும் அவர் முடிவு செய்துள்ளார்’’ என்றனர்.

* செங்ஸ் மூலம் தூது விஜய்யுடன் கூட்டணி வைக்க முடிவு?

அரசியல் ரீதியாக தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என ஆதங்கத்தில் இருந்து வரும் சசிகலா, தனிக்கட்சி ஆரம்பித்து தவெகவுடன் கூட்டணி சேரவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் திரைமறைவில் நடந்து வருகிறது. தவெகவில் உள்ள செங்கோட்டையன் மூலம் சசிகலா ‘காய் நகர்த்தி’ வருகிறாராம். தவெகவில் சசிகலாவை சேர்ப்பதற்கு விஜய்க்கு விருப்பம் இல்லை என தெரிகிறது. ஆனாலும், சசிகலாவுக்கு தென் மாவட்டங்களில் வாக்கு வங்கி உள்ளது என ஆசைவார்த்தை கூறி, விஜய்யை சம்மதிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.