ஜெயலலிதா கொடுக்காத அமைச்சர் பதவியை நான் கொடுத்தேன்; செங்கோட்டையன் கட்சிக்கு துரோகம் செய்ததால் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் கட்சி அலுவலகத்தில் ேநற்று அளித்த பேட்டி: அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு பெரும் பங்கு வகித்த எனக்கு நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டேன். அதில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படம் இல்லை என்று கூறி செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அவர் எம்எல்ஏவாக இருக்கும் கோபி தொகுதி இந்த திட்டத்தின் மூலம் 30 சதவீதம் பயன்பெறுகிறது. ஆனால் அவர் விழாவில் பங்கேற்கவில்லை. இதே நேரத்தில் இலவச சைக்கிள் வழங்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அங்கு ஜெயலலிதா, எம்ஜிஆர் படம் இல்லை என்பது அவருக்கு தெரியாதா. அப்போதே செங்கோட்டையன் கட்சிக்கு எதிரான பி- டீம் வேலையை ஆரம்பித்துவிட்டார். கடந்த 6 மாதங்களாக அவர் பல்வேறு வழிகளில் கட்சிக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் ஆளுங்கட்சியை எதிர்த்து எதுவும் அவர் பேசியதில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைப்பது பற்றி ஆலோசனை நடத்தியதாக கூறினார். அவர்கள் பிரிந்து சென்றவர்கள் அல்ல. கட்சி விரோத நடவடிக்கைக்காக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.
கட்சி விரோத செயலில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு கண்டனம் தெரிவித்து 2500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி ஏக மனதாக அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு எதிராக அவருடன் இணைந்து செயல்படுவேன் என்று கூறியதால் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 54 ஆண்டுகள் கட்சியில் இருந்தவருக்கு கண்டிப்பாக இது தெரியும். இது நான் எடுத்த தனிப்பட்ட முடிவு அல்ல.
மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி, சட்ட திட்டங்களின் அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இருந்த போது செங்கோட்டையனை அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சி பதவியில் இருந்தும் நீக்கி வைத்திருந்தார். நான் முதல்வரான பிறகு தான் அமைச்சர் பொறுப்பும், மாவட்ட செயலாளர் பதவியும் வழங்கினேன். அதற்கு துரோகம் செய்து விட்டார். இப்போது உண்மை வெளிவந்து விட்டது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் வந்தது. அப்போது எதிர்த்து ஓட்டுப்போட்டவர் தான் ஓ.பி.எஸ். இவரா விசுவாசமாக இருப்பவர்? இயக்கத்திற்கு துரோகம் விளைவிப்பவர். பிறகு இணைந்து பணியாற்றுவோம் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து இணைந்து செயல்பட்டோம். அப்போது ஓ.பி.எஸ்.க்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு கொடுத்தோம். ஆனால் அதற்கு மாறாக செயல்பட்டார். அதிமுக தலைமை கட்சி அலுவலகம் ராயப்பேட்டையில் இருக்கிறது. சிலரை அழைத்து சென்று கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்.
இப்படிப்பட்டவர்கள் எப்படி இயக்கத்திற்கு உண்மையாக இருப்பார்கள். கட்சி என்றால் பிரச்னை வரும். ஜெயலலிதா இருக்கும்போது பிரச்னை வந்தது. ஆனால் அவர் வெளியே மறியல் செய்தார். கட்சி அலுவலகத்தை உடைக்கவில்லை. இவர்களுக்கு பதவி இல்லை என்றால் எந்த நிலைக்கும் போவார்கள். தனிக்கட்சி தொடங்கிய டிடிவியுடன் செங்கோட்டையன் அடிக்கடி பேசி வந்தார். அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் இங்கே வெளியிடுகிறேன். இந்த அடிப்படையிலும் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* எந்த எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுத்தார்கள்?
2 முறை தலைமை பதவிக்கு வாய்ப்பு வந்தது என செங்கோட்டையன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, எந்த எம்எல்ஏக்கள் அவரை தேர்ந்தெடுத்தார்கள்? பொய்யான தகவலை கூறுகிறார். செங்கோட்டையன் சிற்றரசர் போல செயல்பட்டார். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் கோபிசெட்டிப்பாளையம் நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்கள் என்று எடப்பாடி தெரிவித்தார்.
* தகுதியில்லாதவர் டிடிவி.தினகரன்
எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ‘டிடிவி தினகரன் அதிமுகவை பற்றிபேச எந்த தகுதியும், அருகதையும் இல்லாதவர். உறுப்பினராக இருக்க கூட தகுதி இல்லாதவர். டிடிவி தினகரன் 10 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர். அவர் உயிரோடு இருக்கும் வரை அவர் சென்னைக்கே வரவில்லை. அவர் இறந்த பிறகு சசிகலா அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கினார். 18 எம்எல்ஏக்களை தன்னுடன் வைத்துக்கொண்டு அதிமுக ஆட்சியை வீழ்த்த சூழ்ச்சி செய்தவர் அவர். ஆனாலும் அனுசரித்து போனோம். தற்போது தனிக்கட்சி தொடங்கி உள்ளார்’ என்றார்
* கொடநாடு வழக்கில் ஏ1 குற்றவாளியா?
கொடநாடு வழக்கில் ஏ1 குற்றவாளி என செங்கோட்டையன் கூறி உள்ளாரே என நிருபர்கள் கேட்டதற்கு, ‘கொடநாடு விவகாரத்தில் எனது ஆட்சி காலத்திலேயே சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டது. அதை மீண்டும் பேசி செங்கோட்டையன் தனது துரோக நாடகத்தை வெளிப்படுத்தி உள்ளார். நான் துரோகம் செய்ததாக கூறுகிறார். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா குறித்து தெரிவித்த கருத்துகளையும், இதன் மூலம் யார் துரோகம் செய்தார்கள் என்பதையும் இங்கே உங்களுக்கு ஆதாரமாக காட்டுகிறேன்’ (சில பேட்டியின் வீடியோக்களை காட்டினார்) என்று எடப்பாடி தெரிவித்தார்.
* அன்று சசிகலா அக்யூஸ்ட்... இன்று?
‘ஓ.பன்னீர்செல்வம் சமூக வலைதளத்தில், கட்சி விதிப்படி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வாகாததால் அவர் நியமித்த நியமனங்கள் செல்லாது. குற்றவாளி (அக்யூஸ்ட்) சசிகலா. தப்பியது தமிழகம். உயிருடன் இருக்கும் வரை சசிகலா உறவினர்களை கட்சியில் அனுமதிக்க மாட்டேன் என ஜெயலலிதா கூறினார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா பேசாதது ஏன்? சசிகலா உள்ளிட்ட மூவர் உடனடியாக சரணடைய உத்தரவு என்று பல்வேறு பதிவுகளை வெளியிட்டிருந்தார். இப்படிப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
