டோக்கியோ: ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, இந்திய வீரர் லக்சயா சென் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். ஜப்பானில் ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் முன்னாள் உலக சாம்பியனும் சிங்கப்பூர் வீரருமான லோ கீன் யேவ் உடன் இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென் மோதினார். போட்டியின் துவக்கம் முதல் அற்புதமாக ஆடி ஆதிக்கம் செலுத்திய சென், முதல் செட்டை, 21-13 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார்.
அடுத்து நடந்த 2வது செட்டில் யேவ் சிறிது போட்டியை தந்தாலும் அதை சாமர்த்தியமாக முறியடித்த சென், அந்த செட்டையும் 21-17 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய சென், அரை இறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டி வெறும் 40 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, உலகின் 13ம் நிலை வீரரான ஜப்பானின் கென்டா நிஷியோடோ உடன் அரை இறுதிப் போட்டியில் லக்சயா சென் மோதவுள்ளார். உலகின் 15ம் நிலை வீரரான லக்சயா சென், காமன்வெல்த் போட்டிகளில் நடந்த பேட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
