Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஜனவரியில் 3.36%... ஆகஸ்டில் 5.92% தேசிய சராசரியை மிஞ்சிய தமிழக விலைவாசி; கிராமப்புறங்களில் அதிக பாதிப்பு மக்கள் தவிப்பு: தவெக அரசு கட்டுப்படுத்த தவறியதாக குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், மாநிலத்தின் பணவீக்கம் தேசிய சராசரியை மிஞ்சியுள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சட்டப்பேரவையில் உறுதியளித்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசுக்கு, ஒன்றிய அரசின் புதிய புள்ளிவிவரங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கடந்த 14ம் தேதி வெளியிட்ட ஆகஸ்ட் மாத நுகர்வோர் விலைக் குறியீட்டு அறிக்கையில், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 4.82 சதவீதமாக பதிவாகியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 5.92 சதவீதமாக உள்ளது. இதன்படி, தேசிய சராசரியைவிட தமிழகத்தில் பணவீக்கம் 1.10 சதவீதப் புள்ளிகள் அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஜனவரியில் 3.36 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஆகஸ்டில் 5.92 சதவீதத்தை எட்டியுள்ளது. அதாவது 2.56 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தேசிய சராசரியான 4.82 சதவீதத்தை விட அதிகம்.

இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, விலைவாசி உயர்வுக்கான காரணங்கள் என்ன என்பதையும், மாநில அரசின் நடவடிக்கைகள் இந்த உயர்வை எந்த அளவுக்கு கட்டுப்படுத்தியுள்ளன என்பதையும் விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இந்திய அளவிலான புள்ளிவிவரங்களில் வெங்காயம், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகியுள்ளது.

இந்த விலைவாசி உயர்வு தொடர்பாக ஆகஸ்ட் 28ம் தேதி நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே எதிர்க்கட்சிகள் பிரச்னையை எழுப்பின. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினர்.

இதற்கு பதிலளித்த உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கடரமணன், தமிழகத்தில் 41 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தினசரி கண்காணிக்கப்படுவதாகவும் விலைவாசியைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். பின்னர் செப்டம்பர் 3 முதல் நியாயவிலைக் கடைகள் உள்ளிட்ட விற்பனை நிலையங்கள் மூலம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது.

இதற்காக நாசிக்கிலிருந்து 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டதாக அரசு தெரிவித்தது. திட்டம் தொடங்கப்பட்டபோது, 8,914 விற்பனை நிலையங்கள் மூலம் சுமார் 35% குடும்ப அட்டைதாரர்களை சென்றடைவதாகவும், கிராமப்புறங்களுக்கும் திட்டத்தை விரிவுபடுத்துவதாகவும், சர்க்கரையை மானிய விலையில் விற்க சாத்தியக்கூறுகளையும் அரசு ஆய்வு செய்வதாகவும் கூறியிருந்தார்.

விலைவாசியை கட்டுப்படுத்துவதில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு பங்கு உள்ளது. பொதுவிநியோக திட்டம், கூட்டுறவுக் கொள்முதல், மானிய விற்பனை உள்ளிட்ட மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நடவடிக்கைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழக அரசின் பொறுப்பு என்கின்றனர் நிபுணர்கள். மேலும், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்காதது அரசின் நிர்வாக குறைபாட்டை காட்டுவதாக உள்ளது.

வெங்காயம் மட்டுமின்றி அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஒரு பொருளை மானிய விலையில் விற்பனை செய்வதுடன் மற்ற பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற கேள்வியையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.

தேசிய சராசரியை மிஞ்சியுள்ள தமிழக பணவீக்கத்தைக் குறைக்க எந்தெந்த பொருட்களுக்கு மானிய விற்பனை விரிவுபடுத்தப்படும். கிராமப்புற மக்களுக்கு நிவாரணம் வழங்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் விலைவாசியை கட்டுப்படுத்த அரசு முறையான நடவடிக்கை எடுக்காதபோது அதனால் அப்பாவி மக்கள் விலைவாசியை கண்காணிப்பதாக அறிவிப்பது மட்டும் போதாது. கண்காணிப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அதன் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைக்கச் செய்வதும் அரசின் கடமை. இதனை உணர்ந்து இனியாவது விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

* அன்றாட செலவுக்கே திண்டாடும் அப்பாவிகள்

விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக விவசாய தொழிலாளர்கள், தினக்கூலிகள் உள்ளிட்ட நிலையான மாத வருமானம் இல்லாத குடும்பங்கள் உணவு, போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கு அதிக தொகையை ஒதுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், குடும்பத்துக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதற்காக பிற செலவுகளை குறைக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

* தேசிய சராசரியை விட அதிகம்

தமிழக பணவீக்கம் 5.92%

தேசிய சராசரி 4.82% +1.10%

கிராமங்களில் 6.1%

நகர்ப்புறங்களில் 5.78%

* தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் சில்லறை விலை பண வீக்கம்

கடந்த திமுக ஆட்சி இருந்தபோது, விநியோக சங்கிலியில் தடை ஏற்படாத அளவுக்கு நிர்வாகித்ததால் தமிழ்நாட்டில் பண வீக்கம் கட்டுக்குள் இருந்தது. ஆனால், தவெக ஆட்சி அமைந்த பிறகு விலைவாசி கடுமையாக அதிகரித்ததால், பண வீக்கவும் தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது. நடப்பு 2026 ஆண்டில் மாதாந்திர சில்லறை விலை பண வீக்க விகிதம் வருமாறு:

ஜனவரி 3.36%

பிப்ரவரி 3.43%

மார்ச் 3.77%

ஏப்ரல் 4.18%

மே 5.11%

ஜூன் 5.24%

ஜூலை 5.44%

ஆகஸ்ட் 5.92%

* உச்சம் தொட்ட விலைவாசி மானிய விற்பனை திட்டம்: கிராமங்களை சென்றடைந்ததா?

தமிழகத்தில் நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் பணவீக்கம் அதிகமாக உள்ளது. அதாவது கிராமப்புறங்களில் பண வீக்கம் 6.1 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 5.78 சதவீதமாகவும் உள்ளது. விலைவாசி அதிகரிப்பால் கிராம மக்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளது புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆனால், வெங்காயத்தை ரூ.35க்கு விற்பனை செய்யும் திட்டம் கடந்த 3ம் தேதி தொடங்கப்பட்டபோது, சுமார் 35 சதவீத குடும்ப அட்டைதாரர்களை மட்டுமே சென்றடைவதாக உணவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். கிராமப்புறங்களுக்கு விற்பனையை விரிவுபடுத்துவதாகவும் அரசு அறிவித்தது. தற்போது எத்தனை கிராமப்புற நியாயவிலை கடைகளில் மானிய வெங்காயம் கிடைக்கிறது.

மொத்தமாக எத்தனை குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ என்ற வரம்பை உயர்த்தும் திட்டம் உள்ளதா, சர்க்கரை உள்ளிட்ட பிற பொருட்களுக்கும் மானிய விற்பனை எப்போது நடைமுறைக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவரங்களை மாவட்ட வாரியாக வெளியிடுவது, அதிகப் பணவீக்கத்தைச் சந்திக்கும் கிராமப்புறங்களுக்கு அரசின் நிவாரணம் சென்றடைந்துள்ளதா என் பதை தெளிவுபடுத்தும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.