ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பான சூழல் உருவானதும் 52 மாணவர்கள் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள்: தமிழக அரசு அறிவிப்பு
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், மாணவர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பாதுகாப்பாக இருக்குமாறும், தமிழ்நாடு அரசு சார்பில் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவீர்கள் எனவும் தெரிவித்துள்ளார். பதற்றமான சூழ்நிலையின் காரணமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான விமான போக்குவரத்து தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலை வழியாக அழைத்து வருவதற்கும் பாதுகாப்பற்ற நிலைமை உள்ளது.
மாணவர்களும் சாலை வழியாக வருவதற்கு விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளனர். எனவே விமான சேவை மீண்டும் தொடங்கியதும் தமிழ்நாட்டிற்கு வருவதாக பெரும்பான்மையான மாணவர்கள் தெரிவித்துள்ளனர். நிலைமை சீரடைந்து பாதுகாப்பான சூழல் உருவானதும் மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள். கல்வி சுற்றுலா சென்ற 4 மாணவர்கள் மட்டும் சாலை வழியாக டெல்லிக்கு புறப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் வந்து சேர்ந்தார்கள். இன்று அதிகாலை விமானம் மூலம் தமிழ்நாடு அழைத்து வரப்படுவர். டெல்லி தமிழ்நாடு இல்ல உதவி எண்கள்: 011-24193300, 9289516712. பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் தமிழ்நாடு அரசின் 24/7 உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.