ஜாக்டோ-ஜியோ போராட்டம் எதிரொலி மாற்று ஆசிரியர்கள் மூலம் பள்ளிகள் இயக்கப்பட்டன
இதுகுறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்த பின்னர் 4 வாரங்கள் கால அவகாசம் அரசு தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. பேச்சு வாரத்தைக்கு பிறகு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தங்கள் போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்து, அதன்படி நேற்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அரசு ஊழியர்களை பொறுத்தவரையில் விடுப்பு எடுத்து பணிக்கு செல்லாமல் அலுவலகங்களை புறக்கணித்தனர். அதேபோல ஆசிரியர்களும் விடுப்பு எடுத்து பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் தேர்வுப் பணிகள் பாதிக்காமல் இருக்கவும், மாணவர்கள் நலன் கருதியும் சில ஆசிரியர் சங்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடாமல் அடையாள ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில் 48 ஆயிரம் ஆசிரியர்கள் நேற்று பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு வராமல் போனதால் 2779 பள்ளிகள் செயல்படுவதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், ஆசிரியர்கள் வராத பள்ளிகளுக்கு மாற்று ஆசிரியர்களை வைத்து பாடங்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.