ஜெயின் கோயில் நில விவகாரம் ஒன்றிய இணையமைச்சருக்கு சிக்கல்: டிஸ்மிஸ் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடெல்லி: புனேவில் ஜெயின் கோயில் நில பேர விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் முரளிதர் மொஹோலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஹிராசந்த் நேம்சந்த் திகம்பர் ஜெயின் கோயில் உள்ளது. இதற்கான சொத்துகளை விற்றதில் ஒன்றிய இணையமைச்சர் முரளிதர் மொஹோலுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என மறுத்துள்ள முரளிதர் மொஹோல், இந்த விவகாரத்தில் தேவையின்றி என் பெயர் தொடர்புபடுத்ப்பட்டுள்ளது என தெரவித்தார். இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் முரளிதர் மொஹோலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அதுல் லோந்தே பாட்டீல் செய்தியாளர்களிடம் பேசும்போது,
“ஹிராசந்த் நேம்சந்த் திகம்பர் ஜெயின் கோயில் விடுதியின் நில விற்பனையில் ஊழல் நடந்துள்ளது. ஒன்றிய இணையமைச்சர் முரளிதர் மொஹோல் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நில பேரம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் முரளிதர் மொஹோல் பதவி விலக வேண்டும். அல்லது அவரது பதவியை பறிக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.