‘‘மாவட்ட தலைவர் பதவி கிடைக்காத மலராத கட்சி மாஜி நிர்வாகி ஒருத்தர் தனி கூட்டமாக செயல்பட்டு வருகிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘விழுப்புரம் மாவட்ட பாஜ மாஜி தலைவர் மேலிடத்தில், மீண்டும் ஒருமுறை மாவட்ட தலைவர் பதவி தனக்கு கொடுக்க வேண்டும் என்று நச்சரித்து வந்தாராம்.. அதற்கு கட்சி மேலிடம், மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டு விட்டது எனக்கூறி கையை விரித்துவிட்டதாம்.. கடுப்பாகி போன மாஜி தலைவர், தனக்கென்று இருந்த ஆதரவாளர்களை ஒன்றிணைத்து, இன்னொரு மாவட்ட தலைவராக செயல்பட்டு வருகிறாராம்.. ஏதாவது கட்சியில் சேர்ந்து தனது பலத்தை கட்சியின் தலைமைக்கு காட்ட வேண்டும்னு கூறி வருகிறாராம்.. அதன்படி, தற்போது பெண் நிர்வாகியை வைத்து ஒரு பிரச்னையை உருவாக்கினாராம்.. இவர் எந்த கட்சியில் இருந்தாலும் அந்த கட்சியை வளரவிடாமல் பார்த்துக் கொள்வதில் திறமைசாலியாம்.. இருக்கும் கட்சியில் தனக்கு உயர் பொறுப்பு கிடைக்கவில்லை என்றால் தனது ஆதரவாளர்களுடன் பிரச்னை செய்துவிட்டு வேறு கட்சிக்கு சென்று விடுவதைதான் இவர் வழக்கமாக கொண்டுள்ளராம்.. அஞ்சு கட்சி அம்மாவாசை என்று மலராதக்கட்சி கூறி வருவதால், அக்கட்சிக்கு விரைவில் முழுக்கு போட உள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அமெரிக்க போதைப்பொருள் சிக்கிய விவகாரம் வெயிலூர்ல பரபரப்பை ஏற்படுத்தி இருக்காமே...’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர்ல இருக்குற தனியார் மருத்துவமனை டாக்டர்கள் குடியிருப்புல 4 நாளுக்கு முன்னாடி, ஈடி ரெய்டு நடந்துச்சு.. இதுல ஒரு டாக்டரோட அறையில போதை பொருள் வெச்சிருந்தது தெரிஞ்சிருக்குது... ஆனா, அந்த அறையில இருந்த டாக்டர், லீவுல சொந்த ஊருக்கு போயிருக்குறதாக சொல்லியிருக்குறாங்க.. அதன்பிறகு அவரு எங்க இருக்குறாருன்னு தெரியல.. இந்த நிலையிலதான் அந்த டாக்டர் அறையில இருந்தது, அமெரிக்காவுல பயன்படுத்துற 5 வகையான போதை பொருள்னு தெரிஞ்சிருக்குது..
இந்த விஷயம் தான் பூதமாக கிளம்பியிருக்குது.. காரணம், உள்ளூரை தாண்டி, அமெரிக்காவுல பயன்படுத்துற போதை பொருள் எப்படி வெயிலூருக்கு வந்துச்சுன்னு, கேள்வியை எழுப்பியிருக்குது.. இதனால காக்கிகள் போதை பொருள் வந்த வழியை தேடி வலை விரிஞ்சிருக்குறாங்க.. இதனால ஸ்டேட் காக்கிகளும், வெயிலூர் பக்கம் கவனம் செலுத்தி வர்றாங்களாம்.. இந்த போதை பொருள் மேட்டர் தான் குளிரும் வெயிலூரில், ஹாட்டாக போய்கிட்டிருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இப்படியே போனா நாம மட்டும்தான் இருப்போம் போல என பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள் புலம்புறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடைசி வரை பலாப்பழக்காரரை நம்பியே இருக்கிறோம்.. நம்ம நிலைமை என்னாகுமோ என்ற பயத்தில் அவரது ஆதரவாளர்கள் புலம்பல் மனநிலைக்கு வந்து விட்டார்களாம்.. ஹனிபீ மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் அரசியலில் பலாப்பழக்காரர் இருக்கும் வரை அவர் காட்டும் வழிதான் தங்களது அரசியல் வழி என்றே இன்றளவும் அவரின் பின்னால் இருந்து வருகிறார்களாம்.. அந்தளவுக்கு அவரை நம்பி இன்னும் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனராம்.. கடந்தாண்டு வரையில் எப்படியாவது இலைக்கட்சியில் ஒன்றாகிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்களாம்.. அந்த நினைப்புக்கு சேலத்துக்காரர் தடை போட்டுவிட்டாராம்.. கட்சியில் மீண்டும் இணைப்பு என்பது சாத்தியமற்ற நிலையில், தெளிவான ஒரு முடிவை விரைவாக எடுப்பார் என நினைத்த ஹனிபீ மாவட்ட ஆதரவாளர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சமாம்.. கடந்தவாரம் பலாப்பழக்காரரின் பிறந்தநாளன்று சொந்த ஊரில் இருந்தும் எப்போதும் வரும் கூட்டத்தில் நான்கில் ஒரு பங்கினர் கூட வரவில்லையாம்.. இணைப்பு சாத்தியமில்லாமல் போய்விட்டது. கூட்டணி குறித்த தெளிவான முடிவும் இல்லாததால் மூத்த நிர்வாகிகளும் வெளியேறுகின்றனர்.. இப்படியே போனால் நாம மட்டும்தான் பலாப்பழக்காரருடன் இருப்போம் போல என புலம்புறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பேடி பாணில் ஆய்வை தொடங்கிய பவர் நிர்வாகி பற்றி தான் யூனியனில் பரவலா பேச்சு ஓடுகிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாநில அந்தஸ்துக்காக போராடும் யூனியனில் நிர்வாகியே ஆதிக்கம் செலுத்துகிறாராம்.. ஐபிஎஸ் பேடி பாணியில் தற்போதைய நிர்வாகியும் புதிதாக நேரடி களஆய்வில் இறங்கி உள்ளாராம்.. சமீபத்தில் கிராமப்புறத்தில் ஆய்வுக்கு சென்ற நிர்வாகி, அங்கிருந்த பெண் தொழிலாளர்கள் வழங்கிய சிறுவள்ளி கிழங்கை ருசித்ததோடு, புகைப்படமும் எடுத்தாராம்..
அதுசமயம் அங்கிருந்த விவசாயி ஒருவர், வேளாண்துறை வழங்கிய மானிய வேர்க்கடலை விதைகளில் முளைப்புத் திறன் இல்லை என முறையிட அதுபற்றி விசாரிப்பதாக கூறினாராம்.. தொடர்ந்து மற்றொருவர் போலி மருந்து விவகாரத்தில் அரசியல்வாதிகள் தப்பிச்சிட்டாங்களே என தனது வேதனையை வெளிப்படுத்த உடனே குறுக்கிட்ட நிர்வாகியோ அதை சிபிஐ பார்த்துக் கொள்ளும். நான் இங்கு அரசியல் செய்ய வரல, மக்களை பார்க்கத்தான் வந்திருக்கிறேன் என்றபடி நகர்ந்து விட்டாராம்.. இதுபற்றிதான் யூனியனில் கிராமவாசிகளிடம் பரவலாக பேச்சு ஓடுகிறது.’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

