Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் பரிதவிக்கும் பலாப்பழக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்துட்டு என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாதுன்னு காலரை தூக்கி விட்டாராமே எஸ்.ஐ..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘திருப்பூர் திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் அரசனின் மற்றொரு பெயர் கொண்ட ஒரு எஸ்.ஐ பணியாற்றி வருகிறாரு.. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைப்புதூர் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருக்காரு.. அப்போது அந்த வழியாக வந்த கல்லூரி மாணவன் பைக்கை நிறுத்தி, சோதனை செய்தாராம்..

அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் மாணவனின் தந்தையை அழைத்து, பைக்கிற்கு முறையான ஆவணங்கள் இல்லை... அபராதம் விதித்தால் அதிகமாக வரும்... அதனால் ரோந்து வாகனத்திற்கு 15 லிட்டர் டீசல் போட்டு விடுங்கள் எனக் கூறியிருக்கிறாரு.. அதற்கு அந்த மாணவனின் தந்தை, ‘15 லிட்டர் டீசல் போடும் அளவிற்கு பணம் இல்லை’ என பதிலளித்துள்ளார். ஆனாலும், அந்த எஸ்.ஐ. விடவில்லையாம்.. எவ்வளவுதான்யா..

இருக்குனு மிரட்டி, பாக்கெட்டில் இருந்த 700 ரூபாயை ஆட்டையை போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம்.. இந்த விவகாரம் உதவி கமிஷனர் ஒருவருக்கு தெரியவந்திருக்கு.. அவர், இந்த விவகாரத்தை மேலிடத்திற்கு கொண்டுசெல்லாமல், தனது அலுவலகத்திற்கு இரு தரப்பையும் வரவழைத்து, லஞ்சப்பணத்தை திரும்ப பெற்றுக்கொடுத்திருக்கிறாரு.. பைக் ஓட்டும்போது சரியான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்னு அந்த மாணவனுக்கு அறிவுரையும் கூறி அனுப்பியுள்ளார்.

‘லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்த முதல் ஆள் நான்தான்... ஆனாலும், நான் விடமாட்டேன்... எனது மனைவி பாஜவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என அந்த எஸ்.ஐ., காலரை தூக்கிவிட்டு கெத்துக்காட்டியிருக்கிறாரு..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘டெல்டாவில் இலை கட்சி நிர்வாகிகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறாராமே மாஜி அமைச்சர்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘டெல்டாவில் மனுநீதி சோழன், நெற்களஞ்சிய மாவட்டங்களில் இலை கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலையில் மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சரான கர்மவீரர் களத்தில் இறங்கியுள்ளாராம்.. நான் சொன்னால் தலைமை கேட்கும் என்ற மாய வலையை அவர் உருவாக்கியுள்ளாராம்... இதன் மூலம் 2வது கட்ட நிர்வாகிகளை எளிதாக கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்னு அவர் நினைக்கிறாராம்..

முக்கிய நிர்வாகிகள் வந்து விட்டால், அதை வைத்து 2வது கட்ட நிர்வாகிகளை தனது வளையத்திற்குள் எளிதாக கொண்டு வந்து விட முடியும்னு அவர் கணக்கு போட்டு இருக்கிறாராம்.. இதற்கான வேலைகளும் தற்போது தீவிரமாக நடந்துக்கிட்டு வருது.. டெல்டா மாவட்டம் தன் கையில் வந்து விட்டால், தலைமை கூட தன்னை அசைத்து பார்க்க முடியாது என அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் புகழ் பாடிக்கிட்டு இருக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மூடப்பட்டிருந்த குவாரி திடீரென செயல்பட கலெக்டர் உத்தரவை முக்கிய அதிகாரி ஒருத்தர் திருத்தியது அம்பலமாகி இருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் கனிம வளத்துறையில் இருக்கும் முக்கிய அதிகாரி ஒருத்தர் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளாராம்.. குவாரி ஒன்றுக்கு அபராதம் விதிக்க கலெக்டர் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை அபராதம் விதித்த பின்னர் செயல்பட அனுமதிக்கலாம் என்ற வகையில் திருத்தி உத்தரவு பிறப்பித்தாராம்..

திடீரென்று மூடப்பட்டிருந்த குவாரி ஒன்று செயல்பட தொடங்க அனுமதி அளித்தது யார் என்ற கேள்வி எழ கலெக்டரின் உத்தரவை திருத்தியது அம்பலமாகி இருக்காம்.. இதுதொடர்பாக கனிம வளத்துறை இயக்குநருக்கு கலெக்டர் அறிக்கை அளித்துள்ளாராம்.. இதை இவர் இதற்கு முன்பும் தொடர்ந்து செய்திருக்கலாம் என்றும், இவரது உத்தரவுகள் முழுமையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்காங்களாம்.. இதனால் எந்த நேரத்திலும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை பாயும்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குக்கர்காரர் பக்கம் சாயும் ஆதரவாளர்களால் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் பலாப்பழக்காரர் பரிதவிக்கிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சியில் தலைமை பதவிச் சண்டை ஏற்பட்ட பிறகு சேலத்துக்காரர் மற்றும் தேனிக்காரர் தலைமையில் கட்சியினர் பிரிந்து கிடக்கிறாங்க.. கடந்த எம்பி தேர்தலின்போது, இலைக்கட்சிக்கு எதிராக தேனிக்காரர், ஹனிபீ தொகுதியில் போட்டியிட்ட குக்கர்காரருக்கு ஆதரவு தெரிவித்திருந்தாரு..

இதனால் இலைக்கட்சி ஹனிபீ தொகுதியில் டெபாசிட்டை இழந்தது. அதே நேரம் கடலோர தொகுதியில் போட்டியிட்ட தேனிக்காரர், இலைக்கட்சியை விட கூடுதல் ஓட்டு வாங்கி விட்டாரு.. ஆனால், ஹனிபீ தொகுதியில் இலைக்கட்சி டெபாசிட் இழப்புக்கு நாங்கள்தான் காரணமென தேனிக்காரர் ஆதரவாளர்களும், குக்கர்காரரின் ஆதரவாளர்களும் மாறிமாறி கூறி வர்றாங்க.. இது ஒருபுறமிருக்க, ஹனிபீ நகரில் குக்கர் தலைவர் வீடு பிடித்து மாதம் 2 முறை வந்து தங்கி செல்கிறார்.

இதனால் ஹனிபீ மாவட்டத்தில் உள்ள குக்கர் தரப்பினர் உற்சாகமடைந்து இருக்காங்களாம்.. மேலும், குக்கர்காரர் இலைக்கட்சியின் அதிருப்தியாளர்களையும், தேனிக்காரரின் ஆதரவாளர்களையும் அடிக்கடி அழைத்து பேசி வருவதாகவும் தகவல்கள் பரவுது.. இதனால் ஹனிபீ மாவட்டத்தில், பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள் குக்கர் பக்கம் சாய முடிவு செய்துள்ளதாக ஒரு டாக் ஓடிக்கிட்டிருக்கு.. இதை பலாப்பழக்காரர் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் பரிதவிப்பில் இருக்கிறாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.