Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

5500 பலா... 2200 ஜாதிக்காய்...மலையடிவாரத்தில் ஒரு பசுமைக்காடு!

ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் உள்ள நாகமலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. பழங்கால பிராமி கல்வெட்டு அமைந்துள்ள இப்பகுதிக்கு வரலாற்றுத் தேடல் உள்ளவர்களும், இயற்கை ஆர்வலர்களும் ஆர்வமாக வந்து செல்வார்கள். இப்படியொரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கிறது செந்தில் என்பவரின் பசுமைக்காடு. ஆம்... பசுமைக்காடுதான்! 20 ஏக்கர் நிலத்தில் 3000 தென்னை, 5500 பலா, 2200 ஜாதிக்காய், 15 ஆயிரம் குத்துமிளகுச்செடிகள் என பசுமையான மரங்களும், செடிகளும் நிரம்பி ஓர் அழகிய காடு போலவே காட்சியளிக்கிறது. ஈரோடு - காங்கேயம் சாலையில் பயணித்து, நாகமலையை ரசித்தவாறே இந்தத் தோட்டத்திற்கு சென்றோம். தோட்டத்தை நிர்வகித்து வரும் கிருஷ்ணா நம்மை வரவேற்று பேசினார்.

``ஏற்கனவே இங்கு தென்னை மரங்கள் வைத்திருக்கிறோம். தென்னைக்கு இடையே எந்த பயிரை ஊடுபயிர் செய்யலாம் என யோசித்தபோது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம், புதுக்கோட்டை பலா குறித்து தெரிவித்தார். புதுக்கோட்டை பலா நல்ல இனிப்புச்சுவையில் இருக்கும். சுளை அதிகமாக இருக்கும். சக்கை குறைவாக இருக்கும். இதுபோன்ற காரணங்களால் பலா நடவு செய்ய முடிவு செய்தோம். அதன்படி படிப்படியாக 5500 பலாக்கன்றுகளை நட்டோம். 6 வருடம், 5 வருடம், 4 வருடம், 3 வருடம், 2 வருடம் என பல்வேறு பருவம் கொண்ட பலாமரங்கள் இங்கு உள்ளன.

பலாக்கன்றுகளை தென்னைக்கு இடையே நடவு செய்திருக்கிறோம். அதாவது 6x6 என்ற இடைவெளியில் நட்டிருக்கிறோம்.பலா ஒரு மைக்ரோ கிளைமேட்டை நிர்வகிக்கும் மரம் என்பதால் தென்னைக்கு இது நல்ல ஊடுபயிராக விளங்குகிறது. அருகில் உள்ள பவானி ஆற்றில் சில சமயங்களில் நீர் இருக்காது. அந்த சமயங்களில் பலா மரங்கள் தென்னைக்கு தேவையான குளிர்ச்சியான சூழலை உருவாக்கும். அதன் சருகுகள் உதிர்ந்து மட்கி நிலத்திற்கு உரமாகும். சருகுகளில் விழும் மழைத்துளி மற்றும் பாசன நீர் ஈரத்தைத் தக்க வைக்க உதவிபுரிகின்றன. இப்போது சில மரங்கள் காய்ப்புக்கு வந்திருக்கின்றன. கடந்த ஆண்டில் ஒரு பலாப்பழம் 35 கிலோ எடை இருந்தது. புதுக்கோட்டை பலா பொதுவாக 5 கிலோவில் இருந்து 30 கிலோ வரை எடை இருக்கும். ஒரு மரத்திற்கு 5 முதல் 50 காய்கள் வரை காய்க்கும்.

பலா மரங்களின் அருகில் குத்து மிளகு செடிகளை வைத்திருக்கிறோம். இது ஒன்றரை வருடத்தில் காய்க்கும். செடிமிளகு என்பதால் அனைவரும் எளிதாக பராமரிக்கலாம். அறுவடை எடுக்கலாம். இப்போது பல செடிகளில் மகசூல் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. செடிக்கு அரை கிலோ காய்ப்பு இருக்கும் என்கிறார்கள். ஏக்கருக்கு 250 கிலோ மகசூல் கிடைக்கும். காய வைத்தால் 100 கிலோ கிடைக்கும். வருடத்தில் 2 முறை அறுவடை எடுக்கலாம். குறைந்தபட்சம் ஏக்கருக்கு 150 கிலோ காய்ந்த மிளகு பெறலாம். இப்போது ஒரு கிலோ மிளகு குறைந்தபட்சம் ரூ.600க்கு விற்கப்படுகிறது.

பலா, மிளகு மட்டுமல்லாமல் ஜாதிக்காய் செடிகளையும் வைத்திருக்கிறோம். இதை 12 x 12 என்ற இடைவெளியில் வைத்திருக்கிறோம். ஜாதிக்காய் மரங்களும் பலாவைப்போல் மேலே உயரமாக சென்று வளரும். எந்த செடிகளையும் தொந்தரவு செய்யாது. இந்தப் பயிர்களை நடவு செய்வதற்கு முன்பு நிலத்தில் நன்றாக உழவு ஓட்டி தொழுவுரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, விர்டிசீலியம், வேம் ஆகியவற்றையும் இட்டு நிலத்தை தயார் செய்வோம். அதன்பிறகு செடிகளை நடவு செய்வோம்.

நிலத்திற்கு தேங்காய்நார்க் கழிவுகளையும் இடுகிறோம். குறிப்பாக மிளகுச்செடிகளை நட்ட ஒரு வாரத்தில் தேங்காய்நார்க் கழிவுகளை இட்டோம். இது மண்ணுக்கு நல்ல உரமாவதுடன் ஈரத்தை தக்க வைத்து தோட்டம் குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது’’ என்றவரைத் தொடர்ந்து, இந்த மரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்து பேசிய சண்முகசுந்தரம், ``தென்னை மரம் இந்தப் பகுதியின் செல்வாக்கு மிகுந்த மரமாக இருக்கிறது. இதனுடன் நாட்டுப்பலா, குத்துமிளகு, ஜாதிக்காய் ஆகியவற்றை நடவு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இவற்றின் மூலம் ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் இருந்து குறைந்தபட்சம் ரூ.5 லட்சத்தை லாபமாக பார்க்கலாம். பலா, ஜாதிக்காய் எல்லாம் நீண்ட கால பயிர்கள் என்பதால் தொடர்ச்சியாக அறுவடை எடுக்கலாம். இந்த மரங்கள் ஒன்றோடொன்று இடையூறு இல்லாமல் சத்துகளைப் பகிர்ந்து வளரும் தன்மை கொண்டவை. இவற்றைப் பராமரிப்பதும் எளிது’’ என்கிறார்.

தொடர்புக்கு:

கிருஷ்ணா - 98942 91818