Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக புகார்; கருத்தரிப்பு மையங்களில் ஐடி சோதனை: தமிழகம் முழுவதும் 20 இடங்களில் நடந்தது

சென்னை: வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்த புகாரில் தமிழகம் முழுவதும் உள்ள 20க்கும் மேற்பட்ட பிரபல தனியார் கருத்தரிப்பு மையங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள டிஜிட்டல் ஆவணங்கள் சிக்கியது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல தனியார் கருத்தரிப்பு மையத்திற்கு தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவளங்கள் கடந்த நிதியாண்டில் தங்களின் உண்மையான வருவாயை மறைத்து, கணக்குகளைக் குறைத்துக் காட்டி பெருமளவில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.

அதன் அடிப்படையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட கருத்தரிப்பு மையங்களில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, அடையாறு, வேளச்சேரி, மதுரவாயல் ஆகிய பகுதிகளில் உள்ள கருத்தரிப்பு மையங்களில் அதிகாரிகள் குழுவினர் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது வருமானத்தை குறைத்துக் காட்டியதற்கான கணக்கு ஆவணங்கள், கம்ப்யூட்டர், பென் டிரைவ் உள்ளிட்ட முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள், வங்கி கணக்கு பரிவர்த்தனை புத்தகங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன மருத்துவ இயந்திரங்கள் தொடர்பான கொள்முதல் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. முழுமையான சோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகே, இந்த கருத்தரிப்பு மையங்கள் எத்தனை கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளன என்ற விவரங்கள் தெளிவாக தெரியவரும்’ என்று தெரிவித்தனர். ஒரே நேரத்தில் முன்னணி கருத்தரிப்பு மையங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.