ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கில் தலைமறைவு பெண் எஸ்ஐக்கு பிடிவாரன்ட்: நெல்லை நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நெல்லை: நெல்லையில் ஐடி ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலை வழக்கில், தலைமறைவாக உள்ள பெண் போலீஸ் எஸ்ஐக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலகத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வ கணேஷ். இவரும் நெல்லையைச் சேர்ந்த எஸ்ஐக்களான சரவணன் - கிருஷ்ணகுமாரியின் மகள் டாக்டர் சுபாஷினியும் காதலித்தனர். கடந்த ஜூலை 27ம் தேதி, சுபாஷினியை
சந்திக்க வந்த கவினை சுபாஷினியின் தம்பி சுர்ஜித் கொலை செய்தார்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சுர்ஜித், அவரது தந்தை எஸ்ஐ சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவரது தாய் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் விசாரணையை முடித்த சிபிசிஐடி, கடந்த அக்டோபர் 22ம் தேதி நெல்லை மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 800 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, நேற்று கவின் கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுர்ஜித், சரவணன், ஜெயபால் ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால், எஸ்ஐ கிருஷ்ணகுமாரி இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் கோர்ட்டில் ஆஜராகாததால், அவருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி ேஹமா உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 28ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.