நீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு: 17.6 டி.எம்.சி. நீர் திறக்கவும் கோரிக்கை
புதுடெல்லி: காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. குறிப்பாக இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் திமுக ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுகுங்கள், அதில் ஒருவேளை திருப்தி இல்லை என்றால் இரு தரப்பும் உச்ச நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இதைத் தொடர்ந்து காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,\\” காவிரியில் இருந்து விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீரான 17.604 டிஎம்சி.யை கர்நாடகம் உடனடியாக திறப்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக கடந்த 24ம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்கு ஏற்கனவே உள்ள பற்றாக்குறை நீரை சரி கட்டும் விதத்தில் விகிதாச்சார அடிப்படையில் 22,000 கன அடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறந்து விட கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொள்ளாமல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வெறும் 9000 கன அடி வீதமாக 15 நாட்களுக்கு திறப்பதற்கு உத்தரவிட்டது.
இது உச்ச நீதிமன்ற நடைமுறைக்கு எதிரானதாகும். மேலும் கர்நாடக அரசு காவிரி நீரை மடைமாற்றம் செய்து பாசன கால்வாய் மூலமாகவும் தடுப்பணைகள் மூலமாகவும் 20 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா அரசு தரப்பில் எடுத்துள்ளனர். குறிப்பாக வறட்சி காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் நீரை திறக்க வேண்டும் என்று விதி இருக்க கூடிய நிலையில் அதனை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடைபிடிக்க முற்றிலும் தவறிவிட்டது.
இதில் கடந்த 27ம் தேதி நிலவரப்படி கர்நாடகா அணைகளில் 72.961 டிஎம்சி நீர் இருந்த போதும், விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவை பிறப்பிக்கவில்லை. இந்த விவகாரத்தை பொறுத்தவரை ஒரு தலைப்பட்சமாக காவிரி ஆணையம் செயல்படுகிறது.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் ஜூன் மாதம் முதல் தற்போது வரை தமிழகத்துக்கு 80.451 டிஎம்சி நீர் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது வரை கிடைத்திருக்கும் நீரின் அளவு 25 புள்ளி 598 டி எம் சி மட்டுமே ஆகும்.
மேலும் வறட்சி காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டால் கூட தமிழகத்திற்கு 43. 202 டிஎம்சி நீர் கிடைத்திருக்க வேண்டும் ஆனால் தற்போது வரை 25.598 டி எம் சி நீர் மட்டுமே கிடைத்துள்ளது. மேலும் இவ்வாறு நீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த பாராபட்சமான உத்தரவை கூட கர்நாடக அரசு செயல்படுத்துவது இல்லை.
குறிப்பாக 9000 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று கடந்த 24ஆம் தேதி ஆணையம் உத்தரவிட்ட நிலையில் அதனை கர்நாடக அரசு கடைபிடிக்க தவறிவிட்டது. இவ்வாறு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட மறுப்பதால் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். குறுவை சாகுபடிக்கான நீரை கூட திறந்து விட முடியாத நிலையில் தமிழக அரசின் சூழ்நிலை உள்ளது.
எனவே தமிழகத்திற்கு விகிதாச்சார அடிப்படையில் கிடைக்க வேண்டிய நீரை திறந்து விட உரிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். குறிப்பாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீர் 17.604 டி.எம்.சி.யை உடனடியாக திறந்து விட உத்தரவிட வேண்டும். மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகம் அமல்படுத்துவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



