சண்டிகர்: பஞ்சாபில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக லூதியானா போலீசார் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் ஆதரவுடன் நடத்தப்பட்டதாக கூறப்படும் கையெறி குண்டு தாக்குதல் தொடர்பாக 10 பேரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பஞ்சாப் காவல்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், ‘‘பஞ்சாபின் மக்கள் தொகை கொண்ட பகுதியில் கையெறி குண்டுத் தாக்குதலை நடத்தும் திட்டம் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கையெறி குண்டுகளை எடுத்துச் செல்வதையும், வழங்குவதையும் ஒருங்கிணைப்பதற்காக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மலேசியாவில் வசித்து வரும் ராஜஸ்தானை சேர்ந்த முக்கிய செயற்பாட்டாளர்கள் மூன்று பேர் மூலமாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
வெளிநாட்டை சேர்ந்த சந்தேக நபர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது ‘‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முக்தர்சாஹிப் பகுதியில் வசிக்கும் குல்தீப் சிங், ஷேகர் சிங் மற்றும் அஜய் சிங் ஆகியோர் முதன்மை குற்றவாளிகளாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
