Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈஷா யோகா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு உச்ச நீதிமன்ற தடையால் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது: உயர் நீதிமன்றம் தகவல்

சென்னை: கோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர் எஸ்.காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள ஆட்கொணர்வு வழக்கில், எனது இரண்டு மகள்கள் கீதா மற்றும் லதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக்கொள்ள சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். எனது மகள்கள் தனி அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தப்படுகிறார்கள். எனது மகள்கள் ஈசா யோகா மையத்திலிருந்து வெளிவந்தால் அவர்களுக்கென தனி இடத்தை கொடுத்து அவர்களுடைய தனிமை பாதுகாக்கப்படும் என்பதால், இரு மகள்களையும் மீட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அமர்வு, ஈஷா யோகா மைய நிறுவன ஜக்கி வாசுதேவ், தனது மகள்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு, மற்றவர்களின் பிள்ளைகளை சன்னியாசிகளை ஆக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ஈஷா மையத்தில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க காவல்துறைக்கும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து ஈஷா மையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவல்துறை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈஷா மையத்தின் சார்பில் உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, ஈஷா வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதால் மேற்கொண்டு இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.