Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இது நியாயமா?

தென்மாநில பெருநகரங்களை ஒப்பிடுகையில், ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. காரணம், விமான நிலையம் விரிவாக்கம். வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் எளிதாக வந்து, செல்ல வேண்டுமென்றால் சர்வதேச விமானங்கள் மிக எளிதாக வந்து, செல்லும் அளவுக்கு விமான நிலைய விரிவாக்கம் தேவை. இதை உணர்ந்தே, முந்தைய திமுக அரசு சார்பில் பரந்தூர் பன்னாட்டு விமான நிலையம் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதற்கு ஒன்றிய அரசின் அனுமதியும் கிடைத்தது. கிட்டத்தட்ட பெரும்பகுதி நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் விளைவாக இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு முன்பு முதல்வர் விஜய் 110 விதியின் கீழ், பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது என்று அறிவித்துள்ளார். திட்டம் கைவிடப்பட்டால், இவற்றை சம்பந்தப்பட்ட மக்களிடமே திருப்பிக்கொடுக்க வேண்டும். இதுதான் விதிமுறை.

ஆனால், இந்த விதிமுறையை மீறி, அந்த நிலங்கள் வேறு பல திட்டங்களை நிறைவேற்ற பயன்படுத்தப்படும் என தவெக அரசு அறிவித்துள்ளது. பொதுவாக எந்த திட்டம் நிராகரிக்கப்பட்டாலும், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி அந்த நிலம் அசல் உரிமையாளர்களான விவசாயிகளிடம் வழங்கப்பட வேண்டும். இதை தவெக அரசு மீறக்கூடாது.  இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவாகவே உள்ளன.

நில அமைப்பு, சுற்றுச்சூழல், பாதுகாப்பு, வான்வெளி கட்டுப்பாடுகள், மக்கள் அடர்த்தி உள்பட பல்வேறு அம்சங்களை கணக்கில் எடுக்கும்போது, சென்னையில் நிலம் கையகப்படுத்துவது என்பது நடக்காத ஒன்று என்றே தோன்றுகிறது.  சென்னையின் கிழக்கு பகுதியில் வங்கக்கடல், வடக்கு பகுதியில் மணலி, எண்ணூர், தெற்கு பகுதியில் தாம்பரம் விமானப்படை வான்வெளி எல்லைக்குள் வருவது, கல்பாக்கம் அணுமின்நிலையம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்றவை விமான நிலைய இடம் தேர்வுக்கு தடையாக உள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சுமார் நான்காயிரம் ஏரிகளுக்கு மேல் உள்ளது. இங்கும், இடம் தேர்வு செய்தால் இதே பிரச்னைதான் வரும். காரணம், இப்பகுதியில் பெரும்பாலும் விவசாய நிலங்களாக உள்ளன. சென்னையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இடங்கள்தான் புதிய விமான நிலைய திட்டத்துக்கான இடங்களாக உள்ளன.

இந்த அருமையான வாய்ப்பை, தவெக அரசு தவறவிட்டது மட்டுமின்றி, ஏற்கனவே நிலம் கையகப்படுத்திய நபர்களுக்கும் நிலத்தை திருப்பிக்கொடுக்க மாட்டோம், வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவோம் என முரண்டு பிடிப்பது, நிலம் கொடுத்த மக்களையும், விவசாயிகளையும் வஞ்சிப்பதாகவே உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை தமிழ்நாடு தருகிறது.

தகவல் தொழில்நுட்பம், இன்ஜினியரிங், டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல் என பல துறைகள் இங்கு சிறப்பாக இயங்குகின்றன. இவை மேலும் வளர்ச்சி அடைய புதிய விமான நிலையம் தேவையாக உள்ளது. ஆனால், தவெக அரசு அடம்பிடிப்பதால், தொழில்வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.