Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இதுதான் மாற்றமா?

மாற்றம் என்று கூறி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்தவர் முதல்வர் விஜய். ஆனால் எல்லாமே ஏமாற்றமாக அமைந்து உள்ளது. எந்தவித வெளிப்படைத்தன்மையும், எதிலும் இல்லை என்பது மிகப்பெரிய குறைபாடு. அவருக்கு வாக்களித்த தமிழ்நாடு மக்கள் நொந்து போய் இருக்கிறார்கள்.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமை செயலக கட்டிடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த தமிழ்நாடு முதல்வரின் அதிகாரப்பூர்வ தலைமை அலுவலகம் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட உள்ளது. இதற்காக நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் புதிய முதல்வர் அறை, தனிச்செயலாளர்களுக்கான அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதியை செய்து கொடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த பணிகளுக்காக ரூ.5.54 கோடியில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை டெண்டர் கோரியிருந்தது. இதில் பல்வேறு முறைகேடுகளும் விதிமீறல்களும் இருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக கொறடா எ.வ.வேலு சரமாரி கேள்வி எழுப்பினார். இதுகுறித்து முக்கிய கட்சிகள் அனைத்தும் கேள்வி எழுப்பி உள்ளன. கடந்த 13ம் தேதி நாளிதழ்களில் டெண்டர் தொடர்பான விளம்பரம் வெளியிடப்பட்டு 4 நாட்கள் கழித்து இணைய தளத்தில் வெளியானது ஏன்?. இணைய தளத்தில் வெளியான ஆவணங்களிலும் மொத்த மதிப்பை குறிப்பிடாமல் மறைத்தது ஏன்?. முதல்வர் அறையை மாற்றும் பணிக்கான டெண்டர் அறிவிக்கும் முன்பே நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியில் பணிகள் எப்படி தொடங்கப்பட்டன?. யாருடைய உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டன?. எந்த அடிப்படையில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டார்? பணிகள் தொடங்கிய பின் டெண்டர் கோரியது ஏன் என்று ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன.

முதல்வர் விஜய் ஆட்சி பொறுப்பேற்றது முதல் இன்று வரை ஊழல் இல்லாத, நியாயமான, வௌிப்படைத்தன்மையான ஆட்சி வழங்கப்பட்டு வருவதாக கூறி வருகிறார். ஆனால் அவரது அலுவலகத்தை மாற்றி அமைக்கும் ஒரு சிறிய பணியில் கூட வெளிப்படைத்தன்மை இல்லையா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. அப்படி இருக்கும் போது விஜய் தலைமையிலான ஆட்சியில் என்ன வெளிப்படைத்தன்மை இருக்கும் என்ற கேள்வியும் அங்கு எழுந்துள்ளது. அப்படியானால் எல்லாமே ஏமாற்றம் தானா என்ற உணர்வும் தற்போது எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை பெரிய அளவில் எழுந்துள்ளது. சென்னை, கோவையில் போதை பழக்கத்தால் 2 மாணவர்கள் படுகொலை செய்யபட்ட பிரச்னையும் சட்டப்பேரவையில் பெரிய விவாதத்தை உருவாக்கி உள்ளது. சிறுமிகள் பலாத்காரம் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதை தடுக்க அமைக்கப்பட்ட சிங்கப்பெண் படையின் நடவடிக்கை என்ன என்பதும் தெரியவில்லை. கர்நாடக வனப்பகுதியில் 3 அப்பாவி தமிழர்களை கர்நாடகா அத்துமீறி சுட்டுக்கொல்கிறது. காவிரி தண்ணீரை திறந்து விடவே மாட்டோம் என்று அந்த மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் பிடிவாதம் பிடிக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு அவர் வரவிருக்கிறார். அவரை சந்தித்து முதல்வர் விஜய் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி எதிலும், எப்போதும் வெளிப்படைத்தன்மை இல்லை. எந்த பிரச்னையையும் கண்டிப்பது இல்லை. எதற்கும் முதலில் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்ற பல்வேறு புகார்கள் முதல்வர் விஜய் மீது உள்ளன. இதுதான் அவர் தந்த மாற்றமா?