இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் 50க்கும் மேற்பட்ட மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளை ஒழுங்குபடுத்தும் வகையில், இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2012ம் ஆண்டு நீட் தேர்வை அறிவித்தது. இதையடுத்து 2013ம் ஆண்டு மே 5ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. மேலும் நீட் தேர்வுக்கு எதிராக 115 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அதேஆண்டில் (2013) ஜூலை 18ம் தேதி, நீட் தேர்வுக்கு தடை விதித்தது. ஆனால் இதுதொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. 2016ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி இதுகுறித்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், நீட் தேர்வுக்கான தடையை விலக்கியது. அதைதொடர்ந்து நிரந்தரமாக நீட் தேர்வு நடத்துவதற்கான சட்டம், 2016ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இந்த அவசர சட்டத்தின் அடிப்படையில், நீட் தேர்வில் விருப்பமில்லை என்று சொல்லும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள், தங்களின் விருப்ப முறையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் நீட் தேர்விற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. பெருநகர பள்ளிகளிலும், குக்கிராம பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள், ஒரே நேர்கோட்டில் இந்த தேர்வை எதிர்கொள்ள முடியாது. கிராமப்புற மாணவர்கள், பள்ளிப்படிப்பை தொடர்வதிலேயே பல்வேறு சிரமங்கள் உள்ளது.
இவர்கள், நீட் போன்ற பிரத்யேக பயிற்சி வகுப்புகளில் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி படிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே கடந்த காலங்களை போல, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கவுன்சலிங் மூலம் மருத்துவம் படிக்க மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது தமிழகத்தின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் தமிழகத்தில் 2017ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க டாக்டர் கனவுடன் பள்ளிகளுக்கு சென்ற பல்வேறு மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்த துயரங்களும் மாநிலத்தை அதிர வைத்தது. 2017ம் ஆண்டில் அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார். தனது மருத்துவர் கனவு தகர்ந்த நிலையில், அவர் தற்ெகாலை செய்தது துயரத்தின் உச்சமானது. 2017ம் ஆண்டு தொடங்கி கடந்த 10 ஆண்டுகளில் தேசிய அளவில் 200க்கும் மேற்பட்டோரும், தமிழகத்தில் 40க்கும் மேற்பட்டவர்களும் நீட் தேர்வு அச்சத்தால் தங்களது இன்னுயிரை மாய்த்துள்ளனர்.
இப்படி மாணவர்களின் உயிர் பறிக்கும் அரக்கனாக மாறி நிற்கிறது நீட் தேர்வு. ஆனால் அது நேர்மையாக நடத்தப்படுகிறதா? என்றால் அதற்கான விடையும் கேள்விக்குறி தான். பல்வேறு காலங்களில் இது நிரூபணமாகியுள்ளது. கடந்த மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு குளறுபடிகளும், அதை தொடர்ந்து வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்களும் இதற்கான சமீபத்திய ஆதாரங்கள். இதனால் ரத்து செய்யப்பட்ட நீட் மறுதேர்வு நாடு முழுவதும் இன்று (21ம் தேதி) நடக்கிறது. அதேநேரத்தில் தொடர்ச்சியாக இதில் வெற்றியை தக்க வைக்க போராடிய கோவை அனுகீர்த்தனா, சேலம் கோபிகா உள்பட 12 மாணவச்செல்வங்களின் உயிர், இப்போதும் நீட் பதற்றத்திற்கு பலியாகி இருப்பது பரிதாபத்திற்குரியது. இதனால் நீட் தேர்வு இனியும் ேதவையா? என்ற பெரும் கேள்வி, தமிழ்நிலத்தில் மட்டுமல்ல, தேசத்தின் பெரும்பான்மை பகுதிகளிலும் எழுந்துள்ளது என்பதே நிதர்சனம். இதை ஒன்றிய அரசு உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் அவசியம்.
