சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அபுபக்கர் சித்திக் வெளியிட்ட அறிக்கை:
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பள்ளி நிகழ்வொன்றில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, பள்ளி மாணவர்களின் சிகை அலங்காரம் மற்றும் ஆடை முறையை மையப்படுத்தி, அவர்கள் மீது அவதூறு சுமத்தும் வகையிலும், ‘மொட்டை அடிக்க வேண்டும்’ என தீண்டத்தகாத தண்டனையை முன்வைத்தும் அமைச்சர் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
மாணவர்கள் முறையாக முடி வெட்டவில்லை என்றால் ஆசிரியர்களே அவர்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்றும், மாணவர்களின் தோற்றம் ரவுடிகளைப் போல் இருப்பதாகவும் பேசியுள்ளார். மேலும், தோற்றத்தை வைத்தே ஒரு மாணவரை குற்றவாளியாக காவல்துறை முடிவு செய்வதை நியாயப்படுத்தும் தொனியில் அமைச்சரின் பேச்சு அமைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பள்ளி வளாகத்திலேயே மொட்டை அடிப்பது போன்ற மனித உரிமை மீறல்களையும், உடலியல் ரீதியான தண்டனைகளையும் ஓர் அமைச்சரே பகிரங்கமாக பரிந்துரைப்பது நவீன கல்விச் சூழலுக்கும், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களுக்கும் எதிரானது.
பள்ளிகளில் மாணவர்களை அச்சுறுத்தும் இத்தகைய சூழலை தவிர்த்து, அவர்களது மனநலனையும் சுயமரியாதையையும் பாதுகாக்கும் ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


