Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இரும்புக்கரம் உயருமா?

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 3 மாதங்களில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் என்ற ரீதியில் இது நீண்டு கொண்டே போகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 30 கொலைகள், 25 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்.

இது ஒருபுறமிருக்க பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கொலை செய்யப்படும் கொடூரமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், கோவையில் கல்லூரி மாணவன் அமுதன் ெகாலை செய்யப்பட்டது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த சுவடு மறைவதற்குள் சென்னை திருவொற்றியூரில் பிளஸ் 2 மாணவன் தனுஷ் கொலை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த மாணவர்கள் 2 பேரும் கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருப்பது போதை பொருள் விவகாரம்.

கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த 19 வயது மாணவர் அமுதன், கல்லூரியில் மாணவர்களிடையே இருந்த கஞ்சா புழக்கத்தை நிர்வாகத்திடம் சொல்லியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாணவர்களில் ஒரு பிரிவை சேர்ந்த 20 பேர் கும்பல், கடந்த 10ம் தேதி அமுதனை கொடூரமாக தாக்கி கொலை செய்தது என்ற தகவல் கசிந்தது. இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. சட்டமன்றத்திலும் இது தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பின.

இந்த சுவடு மறைவதற்குள் சென்னை திருவொற்றியூர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவர் தனுஷ், 30பேர் கொண்ட கும்பலால் பள்ளிக்கு அருகிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் புழக்கத்தை தட்டிக்ேகட்டதால் ஆத்திரமுற்ற கும்பல், தனுஷை கோரமாக தாக்கி கொலை செய்துள்ளனர் என்று வெளியான தகவல் மாநிலம் முழுவதும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் மட்டுமல்ல, அவற்றின் வளாகங்களிலும் போதைப்பொருள் பயன்பாடு என்பது தலைவிரித்தாடுகிறது. இதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று அரசு மார்தட்டுகிறது. இதுபோன்ற போதைப்பொருட்கள் விநியோகம் குறித்து மாணவர்கள் துணிச்சலுடன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களது பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும் முழுபாதுகாப்பு அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் அளித்துள்ளது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு.

ஆனால் அதற்கு வித்திட்ட 2 மாணவச்செல்வங்களின் உயிர்கள் தற்போது சிதைக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர காலைகள் குறித்தும், அது சார்ந்த நடவடிக்கைகள் குறித்தும் அடுத்த 2 நாட்களில் சட்டமன்றத்தில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் என்பது உண்மையை உரக்க சொல்வதாக இருக்க வேண்டும். மாறாக கடந்த கால ஆட்சிகளில் அப்படி நடந்தது, இப்படி நடந்தது என்று சப்பை கட்டு கட்டுவதாக இருக்க கூடாது. இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அடக்க நடவடிக்ைக எடுப்பேன் என்று பிரசார களத்தில் சூடுபறக்க பேசினார் முதல்வர். இதுபோன்ற கோரங்களை தடுக்க, இனியேனும் அந்த இரும்புக்கரம் உயருமா? என்பதே ஒட்டு ெமாத்த மக்களின் பெருத்த எதிர்பார்ப்பு.