ஈரான் ஏவுகணை திட்டத்திற்கு உதவுவதாகக் கூறி இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை!!
வாஷிங்டன்: ஈரான் ஏவுகணை திட்டத்துக்கு உதவுவதாகக் கூறி இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. மராட்டியத்தை சேர்ந்த பார்ம்லேண் நிறுவனம், ஏவுகணை உற்பத்திக்கான ரசாயனத்தை ஏற்றுமதி செய்வதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத் தடை
என்பது ஒரு நாடு, நிறுவனம் அல்லது தனிநபர் மீது பிற நாடுகள் விதிக்கும் நிதி மற்றும் வணிக கட்டுப்பாடுகளாகும். இந்தத் தடைகள் பொதுவாக சட்டவிரோதமான செயல்கள், மனித உரிமை மீறல்கள் அல்லது உலக அமைதிக்கு அச்சுறுத்தலான செயல்களைத் தடுப்பதற்காக விதிக்கப்படுகின்றன. சமீபத்தில், அமெரிக்கா ஈரான், சீனா, இந்தியா, ஹாங்காங் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது, குறிப்பாக ஈரான் ஏவுகணைத் திட்டத்துடன் தொடர்புடையவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க அரசாங்கம் உலகளவில் இயங்கி வரும் வர்த்தக நிறுவனங்கள் மீது நேற்று புதிதாக பொருளாதர தடை விதித்தது. ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா டிரோன்கள் உற்பத்திக்கு உதவுவதாக கூறி ஈரான், சீனா, அரபு அமீரகம், துருக்கி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 32 நிறுவனங்கள் மீது அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் பொருளாதார தடை விதித்தது. இந்திய நிறுவனம் ஒன்றின் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தை சேர்ந்த ரசாயன உற்பத்தி நிறுவனமான பார்ம்லேண் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் அரபு அமீரக நிறுவனத்துடன் இணைந்து ஏவுகணை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சோடியம் குளோரேட் மற்றும் சோடியம் பெர்குளோரேட் ரசாயனத்தை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதாக தெரிவித்து தடை விதித்தது.