Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கொல்கத்தாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் 18வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்: முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கேகேஆர்-ஆர்சிபி மோதல்

கொல்கத்தா: பிசிசிஐ சார்பில் 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 18வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் களம் இறங்குகின்றன. ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் ஆடுகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். மொத்தம் 70 லீக் போட்டிகள் நடக்கிறது. தினமும் இரவு 7.30 மணிக்கு போட்டி நடக்கிறது. 2 போட்டிகள் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முதல் போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்கி் நடைபெறும்.

மே 18ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கிறது. தொடர்ந்து மே 20ம் தேதி ஐதராபாத்தில் குவாலிபயர் 1, 21ம் தேதி எலிமினேட்டர், 23ம் தேதி கொல்கத்தாவில் குவாலிபயர் 2 போட்டியும், மே 25ம் தேதி கொல்கத்தாவில் பைனலும் நடைபெற உள்ளது. நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக மும்பை, சிஎஸ்கே தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. கொல்கத்தா 3 முறையும், சன்ரைசர்ஸ் 2, குஜராத், ராஜஸ்தான், தலா 1 முறையும் பட்டம் வென்றுள்ளன. ஆர்சிபி அணி 2009, 22, 16 ஆகிய ஆண்டுகளில் பைனல் வரை வந்து தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப், டெல்லி, அணிகளும் இதுவரை பட்டம் வென்றதில்லை.

இந்த முறை கொல்கத்தா, டெல்லி, பஞ்சாப், பெங்களூரு ஆகிய அணிகள் புதிய கேப்டன்களுடன் களம் இறங்குகின்றன. நாளை முதல் போட்டிக்கு முன்பாக பிரமாண்ட தொடக்க விழா கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி, நடிகை ஷ்ரத்தா கபூர் மற்றும் நடிகர் வருண் தவான் ஆகியோரின் நடனம் அரங்கேறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களோடு கரண் அவுஜ்லா, அரிஜித் சிங் ஆகியோரும் மேடையேற உள்ளனர். கண்களை கவரும் விதமாக வண்ணமயமான வாணவேடிக்கையும் இடம்பெறும். கலைநிகழ்ச்சிகள் சுமார் 35 நிமிடங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மழை அச்சுறுத்தல்

ஐபிஎல் முதல்போட்டி நடைபெறும் கொல்கத்தாவில் நாளை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நாளை இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரை மழை பெய்ய குறைந்தபட்சம் 50% வாய்ப்பு உள்ளது. அதன்பின்னர் 70% மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிட்ஸ்... பிட்ஸ்...

* ஐபிஎல் வரலாற்றில் இதுவரை விராட் கோஹ்லி 8004 ரன் எடுத்துள்ளார். பவுலிங்கில் சாஹல் 205 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

* அதிகபட்சமாக ஐபிஎல்லில் டோனி இதுவரை 264 போட்டிகளில ஆடி உள்ளார். தினேஷ் கார்த்திக், ரோகித்சர்மா தலா 257, கோஹ்லி 252 போட்டிகளில் ஆடி உள்ளனர்.

* அதிகபட்சமாக விராட் கோஹ்லி 8 சதம் விளாசி இருக்கிறார். ஒரு சீசனில் அதிகபட்சமாக 2016ல் கோஹ்லி 973 ரன் விளாசியது தான் அதிகபட்சமாகும்.

* ஒரு சீசனில் ஆர்சிபியின் ஹர்சல்பட்டேல் (2021), சிஎஸ்கேவின் பிராவோ (2013ல்) 32 விக்கெட் எடுத்ததுதான் அதிகமாகும்.

* கடந்த சீசனில் ஆர்சிபிக்கு எதிராக சன்ரைசர்ஸ் 287/3 ரன் குவித்தது தான் பெஸ்ட் ஸ்கோராகும். குறைந்த பட்சமாக 2017ல் கேகேஆருக்கு எதிராக ஆர்சிபி 49 ரன்னில் சுருண்டுள்ளது.

* 2013ல் புனேவுக்கு எதிராக ஆர்சிபியின் கிறிஸ் கெயில் 175 ரன் விளாசியதுதான் ஒரு இன்னிங்சில் பேட்ஸ்மேனின் அதிக ரன்னாகும்.