ரூ.1,614 கோடி முதலீடு ஆந்திரா சென்றிருப்பது முதல்வர் விஜய் அரசின் தொழில்துறை மந்தநிலையை தோலுரித்து காட்டுகிறது: நயினார் விமர்சனம்
சென்னை: பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை:
திரையில் காட்டப்படும் ‘மாஸ்’ பிம்பங்கள் நிஜ நிர்வாகத்திற்கு உதவாது என்பதற்கு, ரூ.1,614 கோடி கொரிய முதலீட்டை அண்டை மாநிலமான ஆந்திராவிடம் கோட்டைவிட்டிருப்பதே தவெக அரசுக்கு கிடைத்த ஆகச்சிறந்த ‘ரியாலிட்டி செக்’. ஹூண்டாய், கியா நிறுவனங்களின் சப்ளையர்களான கொரியாவைச் சேர்ந்த ஹ்வாஷின், செஷான் மற்றும் ஐவாமெட் ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டோடு பேச்சுவார்த்தை நடத்தியும், அந்த வாய்ப்பு கைநழுவி ஆந்திராவுக்குச் சென்றிருப்பது முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் தொழில்துறை மந்தநிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது.
‘‘கையில் இருக்கும் வெண்ணெய்யை நழுவவிட்டுவிட்டு நெய்க்கு ஊர் சுற்றும் கதையாக’’, ஏற்கனவே மாநிலத்தின் வாசலில் நின்ற நிறுவனங்களையே தக்கவைக்கத் திராணியின்றி தாரைவார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திர அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு முதலீடுகளை தட்டிச் சென்றபோது, தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என்ன செய்து கொண்டிருந்தார்? இதன் இறுதிப் பாதிப்பு, தமிழக இளைஞர்களுக்கான 1,400க்கும் மேற்பட்ட உயர்தர வேலைவாய்ப்புகளும் பொருளாதாரப் பலன்களும் எல்லை தாண்டி ஆந்திராவிற்குச் சென்றது தான். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ரூ.5 கோடி லஞ்சம் தர தயாராக இருந்தவரை கைது செய்வதில் அரசுக்கு என்ன சிக்கல்?
பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி வரை உங்களுக்கு லஞ்சம் தரத் தயாராக இருந்த நபரை அடையாளம் காட்டுவதிலோ அல்லது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்வதிலோ அரசுக்கு என்ன சிக்கல்? ‘மொட்டைக் கடுதாசி’ போல மேடையில் பேசுவது கல்வி அமைச்சருக்கு அழகல்ல. அதுமட்டுமன்றி, உங்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக இருக்கும் லயோலா மணியை எதற்காக அணுகுகிறார்கள்?
அவரைப் பிடித்தால் தான் உங்களை நெருங்க முடியும் என்ற சொல்லப்படாத விதி ஏதேனும் இருக்கிறதா அல்லது அவர் மூலமாகத் தான் உங்கள் பணப் பரிவர்த்தனைகள் நடக்கிறதா? ‘ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காதீர்கள்’ என்று முதல்வரே பொது மேடையில் கூறிய பிறகும் கூட, கோடிக்கணக்கில் அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க ஒருவர் முயல்கிறார் என்றால், அமைச்சர்கள் மட்டத்தில் முறைகேடுகள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன என்று தானே அர்த்தம்? ஒருவேளை பேரம் படியாததால் தான் இன்று பொதுவெளியில் வந்து இப்படி புலம்புகிறீர்களோ? பதில் சொல்லுங்கள் அமைச்சரே. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


