இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டருக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல்
*பெரம்பலூர் கலெக்டர் நேரில் ஆய்வு
பெரம்பலூர் : பெரம்பலூரில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் சிறப்பு சக்கர நாற்காலி வேண்டி விண்ணப்பித்த மாற்று திறனாளிகளுக்கு நடைபெற்ற நேர்காணலை மாவட்ட கலெக்டர் மிருணாளினி பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுதிறனாளிகள் நலத் துறையின்சார்பில், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் மின்கலத்தால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வேண்டி விண்ணப்பித்த மாற்றுதிறனாளிகளுக்கு நடத்தப்பட்ட நேர்காணலை மாவட்ட கலெக்டர் மிருணாளினி நேற்று (13ம் தேதி) பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு முகாம்களில் சக்கர நாற்காலி, மின்கல நாற்காலி வேண்டி விண்ணப்பித்த, மாற்று திறனாளிகளால் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் நேற்று நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலில் 70க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இந்த நேர்காணலில், தண்டு வடம் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகள் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் சக்கர நாற்காலி ஆகியவைகளை கேட்டு விண்ணப்பித்த மாற்று திறனாளிகளின் பாதிப்புகளை கண்டறிய, அரசு எலும்பு முறிவு மருத்துவர் மற்றும் பாதிப்புத் தன்மைகளை கண்டறிந்து பின்னர் வண்டியை இயக்க தகுதியுடையவர் என ஒப்புதல் தர பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நேர்காணல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வண்டியை இயக்குவதற்குத் தகுதியுடைய அனைத்து மாற்று திறனாளிகளின் பெயர் பட்டியல்கள் அரசுக்கு அனுப்பி, நிதிஆதாரம் பெற்று, பதிவு மூப்பு அடிப்படையில் அவர்களுக்கான வண்டிகள் வழங்கப்படும்.இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை அலுவலர் சீனிவாசன், பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணபவ, அரசு எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் தமிழ்செல்வன் உள்பட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.