Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பன்னாட்டு கடற்படை பயிற்சியில் இந்திய கடற்படை பங்கேற்பு: ஹவாய் சென்றடைந்தது கடல்சார் ரோந்து விமானம்

வாஷிங்டன்:அமெரிக்க கடற்படையால் நடத்தப்படும் பன்னாட்டு கடற்படைப் பயிற்சியான, 30வது ரிம் ஆப் தி பசிபிக் (ரிம்பேக்) பயிற்சியில் பங்கேற்பதற்காக, இந்தியாவின் கடல்சார் ரோந்து விமானம் பி-8ஐ ஹவாய் தீவு வந்துள்ளது. வரும் 24ம் தேதி முதல் ஜூலை 31 வரை ஹவாய் தீவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடைபெறும் 30வது பசிபிக் விளிம்புப் பயிற்சியில் , முப்பது நாடுகள், 30க்கும், மேற்பட்ட கப்பல்கள், ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்கள், 15 தேசிய தரைப்படைகள், 206க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்கின்றன. இந்த பயிற்சியில் பங்கேற்க இந்திய கடற்படை கடல் சார் ரோந்து விமானம் ஹவாய்க்கு வந்துள்ளது.

இந்தப் பயிற்சியில் நீர்நிலப் படை நடவடிக்கைகள், பீரங்கி மற்றும் ஏவுகணைப் பயிற்சிகள், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர், வான் பாதுகாப்பு நடவடிக்கைகள், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்பு, கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகள், கண்ணிவெடித் தடுப்பு நடவடிக்கைகள், வெடிபொருள் அகற்றுதல், மற்றும் நீர்மூழ்கி மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூட்டணிக் கடற்படைகளுடன் ஒருங்கிணைந்த செயல்பாட்டுத்திறன், கடல்சார் கள விழிப்புணர்வு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் சுதந்திரமான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியக் கடற்படையின் பங்கேற்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளது.