Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடைய 24 இந்திய தாதாக்கள் கைது: அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய கூட்டுப் படை அதிரடி

வாஷிங்டன்: இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச கும்பல்களுடன் தொடர்புடைய 24 பேரை அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாட்டு பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி கனடாவில் சீக்கிய கோயில் அருகே காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட வழக்கு மற்றும் பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா, மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில் இந்தியாவின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி ப்ரார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.

சிறையில் இருந்தபடியே கடத்தல் செல்போன்கள் மூலமாக சர்வதேச அளவில் குற்றச்செயல்களை லாரன்ஸ் பிஷ்னோய் இயக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பரவியுள்ள இவர்களது கும்பல், தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு கோடிக்கணக்கான ரூபாயை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவதை தேசிய புலனாய்வு முகமை கண்டறிந்து, இதனை ‘புதிய நிழல் உலக தாதா கும்பல்’ என்று எச்சரித்திருந்தது.

இந்நிலையில், இந்திய குற்றக் கும்பல்களின் சர்வதேச வலைப்பின்னலை முற்றிலும் முடக்கும் நோக்கில் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய புலனாய்வு அமைப்புகள் இணைந்து ‘ஆபரேஷன் ஹார்ட் பால்’ என்ற மாபெரும் கூட்டு தேடுதல் வேட்டையை நடத்தின. இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் பகவான்பூரியா கும்பலைச் சேர்ந்த 24 பேரை சர்வதேச போலீசார் வெவ்வேறு நாடுகளில் கைது செய்துள்ளனர். இதில் 3 பேர் கனடாவிலும், 1 நபர் ஸ்பெயினிலும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 7 பேர் ஏற்கனவே காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இக்கும்பலிடம் இருந்து சுமார் 1,000 கிலோ கோகைன் போதைப்பொருள், 1 கிலோ ஹெராயின், 40,000 அமெரிக்க டாலர் ரொக்கம் மற்றும் 12 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மொத்தம் 37 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய மீதமுள்ள 10 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.