முருகனின் மூன்றாம் படை வீடு என்ற பெருமைக்குரியது பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில். பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சொந்தமாக உள்ளன. கோயில் அடிவார பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமாக ரூ.100 கோடி மதிப்புள்ள 1.35 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை விற்கவோ, வாங்கவோ யாருக்கும் உரிமையில்லை. இந்த இடத்தை விற்க முயற்சி நடந்ததாக கூறி, பழநி கோயில் இணை ஆணையர், மடத்தின் தக்காராக நியமிக்கப்பட்டார்.
ஆனாலும், இந்நிலம் முறைகேடாக கடந்த 6ம் தேதி தனியாருக்கு ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விற்றவர், வாங்கியவர்கள் 2 பேர் உள்பட 4 பேர் மீது 7 பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. அதாவது, பழநி மலைக்கோயிலுக்கான கைங்கர்ய நிலம் என்றாலும், அது கோயிலுக்கான இடமாகவே கருதப்பட வேண்டும்.
ஆகையால்தான் பழநி கோயில் இணை ஆணையரே தக்காராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடத்தை விற்கக்கூடாது என்ற உத்தரவு இருந்தும், தனியாருக்கு விற்கப்பட்டது எப்படி? அப்படியென்றால் அறநிலையத்துறை இதுதொடர்பாக பத்திரப்பதிவு துறைக்கு அறிவுறுத்தவில்லையா? விற்கவே கூடாத நிலத்தை 98 சதவீதம் சந்தை மதிப்பை குறைத்து, அதாவது, ரூ.98 கோடி குறைவாக மதிப்பிட்டு பத்திரப்பதிவு செய்தது ஏன்? பத்திரப்பதிவு நடந்த 6ம் தேதி பழநி சார்பதிவாளரை விடுப்பில் அனுப்பி விட்டு, பொறுப்பு சார்பதிவாளர் மூலம் அவசர பத்திரப்பதிவு ஏன் நடந்தது?
பத்திரப் பதிவிற்காக அவசரம், அவசரமாக நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டுள்ளது. அப்போது, இந்நிலம் தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள், நிபந்தனைகளை நீதிமன்றத்திற்கு ஏன் தெரியப்படுத்தவில்லை? இந்நிலம் தொடர்பான விவரங்கள் பத்திரப்பதிவை ரத்து செய்வதற்கான மேல்முறையீட்டின் போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எத்தனையோ பிரச்னைகள் வெளிச்சத்திற்கு வரும்போது வாய் மூடி நிற்கும் தவெக அரசு,
அவசரம் அவசரமாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோரை விளக்கம் அளிக்க வைத்தது ஏன்? அந்த விளக்கத்திலும் எண்ணற்ற முரண்பாடுகள் இருந்தது ஏன்? இப்படி எண்ணற்ற கேள்விகள் பக்தர்கள், பொதுமக்கள் மனதில் எழுந்துள்ளன. இதில் அறநிலையத்துறை முக்கிய அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக வந்த தகவலால், அவர்களிடம் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
நிலத்தை பதிவு செய்தவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து சிபிசிஐடி தீவிர விசாரணை நடத்த வேண்டும். ஏற்கனவே, கடந்த 2004ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, நவபாஷாண சிலையை மறைத்து மூன்றரை அடி உயர ஐம்பொன் சிலை வைக்கப்பட்டது. இதற்கு அப்போதே பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறி, ஸ்தபதி மற்றும் பழநி கோயில் உதவி ஆணையர், அறநிலையத்துறை ஆணையர், நகை மதிப்பீட்டாளர் உள்பட பலர் கைதாயினார்.
இந்த சர்ச்சைக்கு பிறகு மீண்டும் பழநி கோயில் நில முறைகேடு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேர்மையான முறையில் விசாரணை நடத்தி, நடந்த முறைகேடுகளை தமிழக அரசு வெளிக்கொணர வேண்டும் என்ற தமிழக மக்களின் குரல் முதல்வர் காதில் கேட்குதா, கேட்கலை என்றால் இன்னும் சத்தமாகவே மக்கள் கூறுவார்கள்.


