சென்னை: அறிவுசார் சொத்துரிமை மையங்களின் ஆய்வுக் கூட்டத்தில் 7 மையங்களுக்கு சிறந்த செயல்பாட்டிற்காக பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் கீழ் இயங்கும் காப்புரிமை தகவல் மையம், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றுடன் இணைந்து, காப்புரிமைகள், பதிப்புரிமைகள், வர்த்தக குறியீடுகள், தொழில்துறை வடிவமைப்புகள், புவிசார் குறியீடுகள் போன்ற அறிவுசார் சொத்துரிமைக்கான மாநில அளவிலான உதவிகளை வழங்குகிறது.
பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் அறிவுசார் சொத்துரிமை மையங்கள் மூலம் மாநிலத்தில் உள்ள அறிவியல் சமூகத்திற்கு அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த காப்புரிமை தகவல் மையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அறிவுசார் சொத்துரிமை மையங்களின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கு ஆய்வுக் கூட்டங்கள் நடந்து வருகிறது. இதன்மூலம் அதில் உள்ள குறைபாடுகள் அல்லது சிக்கல்களை பற்றி விவாதிக்கவும் இந்த கூட்டம் உதவுகிறது.
அதன்படி, நேற்று சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் 40 அறிவுசார் சொத்துரிமை மையங்களில், சிறந்த செயல்பாட்டிற்காக சேலம் பெரியார் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், சென்னை இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 7 மையங்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலர் வின்சென்ட் வழங்கினார். மேலும் நடப்பாண்டில் வந்தவாசி கோரை பாய், கொல்லிமலை பலாப்பழம், கொல்லிமலை காபி, பொள்ளாச்சி தென்னை நார், முகவை குழியடிச்சான் சிவப்பு அரிசி ஆகியவற்றுக்கு அறிவுசார் சொத்துரிமை மையங்களின் மூலம் புவிசார் குறியீடுகள் பதிவு செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
