Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அவமதிப்பு

நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவை தனித்தனி அதிகாரம் கொண்ட அமைப்புகள். அவை நமது நாட்டிற்கு வலுசேர்க்கக்கூடியவை. இன்றைக்கு அத்தனையும் தடம் புரளும் சூழல் உருவாகி இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தை பொது வெளியில் விமர்சனம் செய்கிறார் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர். பா.ஜ எம்பி நிஷிகாந்த் துபே இன்னும் ஒருபடி மேலே சென்று உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம் என்கிறார். உச்ச நீதிமன்றத்தின் உச்ச வரம்பை, அதிகாரத்தை அவமதிக்கும் வகையில் ஜெகதீப் தன்கரும், நிஷிகாந்த் துபேவும் நடந்து கொள்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம், தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு தான்.

தமிழ்நாடு மக்களால் தேர்வு செய்யப்பட்ட, முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இடம் பெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதால் வந்ததுதான் இந்த பிரச்னை. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு என்று தனியாக அதிகாரம் இல்லை, அவர் அமைச்சரவையின் பரிந்துரை அடிப்படையில் செயல்படுபவர். தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய முறையில் ஒப்புதல் அளிக்க வேண்டும். அந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தால் கூட 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை ஆளுநர்களை கொண்டு இன்னொரு சரிசம ஆட்சி நடத்தி வந்த ஒன்றிய அரசுக்கு இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒன்றிய அரசுக்கு பதில் அரசியல்சாசன பதவி வகிக்கும் ஜெகதீப் தன்கர், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை பொதுவெளியில் விமர்சித்து பேசி வருகிறார். இந்திய ஜனாதிபதிக்கு உத்தரவிடுகிறார்கள், சூப்பர் நாடாளுமன்றமாக சில நீதிபதிகள் செயல்படுகிறார்கள் என்று அவர் விமர்சனம் செய்தார். நாடாளுமன்றத்தில் சர்ச்சை கருத்துக்களை தெரிவிக்கும் பா.ஜ எம்பி நிஷிகாந்த் துபே, உச்ச நீதிமன்றம் சட்டத்தை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம் என்று கூறி தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவையும் அவர் விமர்சனம் செய்தார். இது பா.ஜவின் கருத்து அல்ல என்று ஜே.பி. நட்டா கூறினாலும், ஜெகதீப் தன்கர் இன்னும் விமர்சனம் செய்வதை குறைக்கவில்லை. நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்ட நாடாளுமன்றம் தான் உயர் அதிகாரம் கொண்டது.

அவர்களுக்கு மேலான அதிகாரம் கொண்டவர்கள் யாரும் இல்லை என்று மீண்டும் பேசியிருக்கிறார். இதைத்தானே தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது. தமிழ்நாடு மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நிறைவேற்றிய மசோதாவுக்கு உரிய காலத்தில் ஒப்புதல் கொடுக்காமல் நிறுத்தி வைக்க ஆளுநர் ஆர்.என். ரவி யார்?. அவர் தமிழ்நாடு சட்டப்பேரவையை விட அதிக அதிகாரம் கொண்டவரா?. அதை ஜெகதீப் தன்கர் விளக்குவாரா?. நாடாளுமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஜனாதிபதி உடனே ஒப்புதல் அளிக்காமல், காலம் தாழ்த்தினால் அல்லது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி போல 2 ஆண்டுகள் கிடப்பில் போட்டு வைத்து இருந்தால் அப்போது ஜெகதீப் தன்கர் என்ன விமர்சனம் செய்வார்?. பதில் சொல்வாரா ஜெகதீப் தன்கர்?