மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து அந்தமான், அகமதாபாத், ஜெய்ப்பூர், மும்பை, கவுகாத்தி, கொச்சி, புவனேஸ்வர், மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட உள்நாட்டு விமானங்கள், டென்பாசர் நகருக்கு செல்லும் சர்வதேச விமானம் என 12 விமானங்கள் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏராளமான வினமாங்கள் இயக்கப்படுகின்றன. கடந்த சில தினங்களாக பலத்த சூறைக்காற்றும் மற்றும் மழை காரணமாக புறப்படுவதில் தாமதம் மற்றும் ரத்து காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 11 உள்நாட்டு விமானங்கள், ஒரு சர்வதேச விமானம் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மழை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அகமதாபாத்துக்கு அதிகாலை 3.55 மணிக்கு இயக்கப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அந்தமானுக்கு அதிகாலை 4.40 மணிக்கு இயக்கப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ், மும்பைக்கு அதிகாலை 5.25 மணி இயக்கப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ், கவுகாத்திக்கு அதிகாலை 5.30 மணிக்கு இயக்கப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ், புவனேஸ்வருக்கு அதிகாலை 5.50 மணிக்கு இயக்கப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் என சென்னையில் இருந்து 5 புறப்படும் விமானங்கள் மற்றும் இன்று பகல் 12.25 மணிக்கு, கொச்சியில் இருந்து சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் வருகை விமானம் போதிய பயணிகள் இல்லாமல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் சென்னையில் இருந்து, இன்று அதிகாலை 4.35 மணிக்கு இந்தோனேசியாவின் டென்பாசர் நகருக்கு செல்ல வேண்டிய, இண்டிகோ ஏர்லைன்ஸ் சர்வதேச விமானமும் போதிய பயணிகள் இல்லாமல், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிறுவனங்கள் தரப்பினர் கூறுகையில், ‘நிர்வாக காரணங்களுக்காக விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன’ என்றனர்.

