இன்னிங்ஸ், 98 ரன் வித்தியாசத்தில் ஒடிஷாவை வீழ்த்தியது பரோடா: க்ருணால் ஆட்ட நாயகன்
263 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய ஒடிஷா, 3ம் நாளான நேற்று 165 ரன்னுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் மற்றும் 98 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கார்த்திக் பிஸ்வால் 53*, அனுராக் சாரங்கி 49, சந்தீப் பட்நாயக் 29 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். பரோடா பந்துவீச்சில் நினத் ரத்வா 6, மாகேஷ் பிதியா, பார்கவ் பட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்சில் சதம் விளாசிய க்ருணால் பாண்டியா ஆட்ட நாயகன் விருது பெற்றார். பரோடா அணி 7 புள்ளிகளை தட்டிச் சென்றது. மும்பை முன்னிலை: அகர்தலாவில் திரிபுரா அணியுடன் நடக்கும் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் மும்பை அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் மும்பை 450 ரன் குவித்த நிலையில், திரிபுரா 302 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 148 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை, 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 7 ரன் எடுத்துள்ளது.
* ஆந்திரா அணியுடன் விசாகப்பட்டணத்தில் நடக்கும் பி பிரிவு போட்டியில், இமாச்சல் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 478 ரன் எடுத்துள்ளது (கேப்டன் ரிஷி தவான் 195, ஆகாஷ் வசிஷ்ட் 85, அங்கித் கல்சி 53). முன்னதாக, ஆந்திரா முதல் இன்னிங்சில் 344 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
* ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கும் பி பிரிவு லீக் ஆட்டத்தில், ஐதராபாத் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 536 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அடுத்து களமிறங்கிய புதுச்சேரி அணி முதல் இன்னிங்சில் 153 ரன்னுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது. 3ம் நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. கங்கா ஸ்ரீதர் ராஜு 61 ரன், கேப்டன் அருண் கார்த்திக் 14 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.