Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தோனேசியாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகள் வழங்க ஒப்பந்தம்: பிரதமர் மோடி-அதிபர் சுபியாந்தோ சந்திப்பில் கையெழுத்து

ஜகார்த்தா: பிரதமர் மோடி - அதிபர் பிரபோவோ சுபியாந்தோ இடையேயான பேச்சுவார்த்தையில், இந்தோனேசியாவுக்கு பிரம்மோஸ் மற்றும் அஸ்திரா ஏவுகணைகளை வழங்குதல், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அரிய கனிமங்களுக்கான விநியோக சங்கிலியை வலுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி முதல்கட்டமாக இந்தோனேசியாவுக்கு நேற்று முன்தினம் சென்றார்.

அங்கு, தலைநகர் ஜகார்த்தாவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி, இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாந்தோ இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. அதில், வர்த்தகம், பாதுகாப்பு, அரிய கனிமங்கள், தொழில்நுட்பம், கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி, இந்தியாவிடமிருந்து அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா விருப்பம் தெரிவித்துள்ளது.

அதோடு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய தயாரிப்பான அஸ்திரா ஏவுகணை (வானிலிருந்து வான் இலக்கை தாக்கும்) வெற்றிகரமாக செயல்பட்டதைத் தொடர்ந்து, அதனையும் இறக்குமதி செய்ய இந்தோனேசியா முடிவு செய்துள்ளது. ஏற்கனவே வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளன. இதுதவிர, அரிய கனிமங்களுக்கான விநியோக சங்கிலியை வலுப்படுத்தும் நோக்கத்தில், நிக்கல், எஃகு மற்றும் பாக்சைட் ஆகியவற்றிற்கான இந்தோனேசியாவின் பிரித்தெடுத்தல் மற்றும் பதப்படுத்தும் நிறுவனங்களில் இந்தியா முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

மின்சார வாகனங்கள் மற்றும் தொலைத்தொடர்புகளில் பயன்படுத்தப்படும் அரிய-பூமி நிரந்தர காந்தங்கள் மற்றும் துருப்பிடிக்காத எஃகு பாகங்களைத் தயாரிக்க இரு நாடுகளும் தொழில்துறை கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்தோனேசியாவில் இந்தியாவின் கூட்டு முயற்சியுடன் பிரத்யேக துருப்பிடிக்காத எஃகு தகடு உற்பத்தி ஆலையை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சபாங் துறைமுகத்தை கூட்டாக மேம்படுத்தவும், இந்தோனேசியாவில் பெங்களூரு ஐஐஎம் வளாகத்தை அமைக்கவும், இந்தியாவின் யுபிஐ கட்டமைப்பு, இந்தோனேசியாவின் பண பரிவர்த்தனை முறையுடன் இணையவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ‘‘இந்தியா-இந்தோனேசியா கூட்டாண்மையின் பொற்காலம் இன்று தொடங்குகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

2018ல் நாங்கள் மேற்கொண்ட விரிவான உத்திசார் கூட்டாண்மை இன்று புதியதொரு பரிமாணத்தை எட்டியுள்ளது. வளர்ச்சி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் கல்வி என ஒவ்வொரு துறையிலும் நாங்கள் முக்கியமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார். மேற்கு ஆசியாவின் சூழல் உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய சவால்கள் குறித்தும் பிரதமர் மோடியும் இந்தோனேசிய அதிபர் சுபியாந்தோவும் விவாதித்தனர். அதில், பாலஸ்தீன விவகாரத்தைப் பொறுத்தவரை, இரு-நாடு தீர்வு மற்றும் நீண்டகால அமைதிக்கு ஆதரவளிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

* இந்திய ஓட்டு மெஷினை வாங்கும் இந்தோனேசியா

சுமார் 28.8 கோடி மக்கள்தொகையுடன், உலகின் 3வது பெரிய ஜனநாயாக நாடாக திகழும் இந்தோனேசியா தனது தேர்தல் முறையை நவீனமயமாக்குவதற்காக தேர்தல் தொழில்நுட்பம், மேலாண்மை நிபுணத்துவம் மற்றும் நிறுவன ஆதரவிற்காக இந்தியாவின் உதவியை கேட்டுள்ளது. இதற்காக, இந்தியாவின் பிரத்யேக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வாங்க விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தம், தேர்தல் தொழில்நுட்பம், மனிதவள மேம்பாடு, திறன் வளர்ப்பு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வது ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே பூடான், நமீபியா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் வாக்கு இயந்திரத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

* பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவின் உயரிய விருது

இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் மாளிகையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருதை அதிபர் சுபியாந்தோ வழங்கி கவுரவித்தார். 1959ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருது இந்தோனேசியாவின் மிக உயர்ந்த கவுரவமாக போற்றப்படுகிறது.

இந்தோனேசியாவின் ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு சிறப்பான சேவையாற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இருதரப்பு உறவை வலுப்படுத்த ஆற்றிய பங்களிப்பதற்காக இவ்விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடி பெறும் 35வது சர்வதேச விருதாகும். சமீபத்தில் சீஷெல்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* பேரம் பேசாமல் நேருவுக்கு கிடைத்தது: காங்கிரஸ் விமர்சனம்

பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜ-காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்டன. பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா தனது அறிக்கையில், ‘‘இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்தோனேசியா, பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கியதன் மூலம் மோடியை எதிர்ப்பவர்களுக்கு கடுமையான அடி கிடைத்துள்ளது.

இதற்கு முன் பல முஸ்லிம் நாடுகளும் பிரதமர் மோடிக்கு விருது வழங்கி உள்ளன’’ என்றார். இதற்கு பதிலளிக்கும் வகையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக ஊடக பதிவில், ‘‘நேருவுக்கு இவ்விருது அவர் மறைந்த பிறகு வழங்கப்பட்டது. அதைப் பெற அவர் யாரிடமும் பேரம் பேச வேண்டியதில்லை’’ என கூறி உள்ளார்.