தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு காரீப் பருவத்தில் அதிகபட்ச பரப்பில் பயிர்களை சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் யூரியா மற்றும் டிஏபி உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசானது தமிழகத்திற்கு ஏப்ரல், மே மாதங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரத்தை இதுவரை வழங்கவில்லை. அதாவது மொத்த தேவைக்கான 39,001 டன் யூரியா, 28,607 டன் டிஏபி, 24,235 டன் பொட்டாஷ் உரங்களை, உர நிறுவனங்கள் தமிழகத்திற்கு வழங்கவில்லை.
தென்மேற்கு பருவமழை மே மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்கும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதை ஆதாரமாக வைத்து சுமார் 25 லட்சம் ஏக்கரில் நெல், உளுந்து, பச்சைபயறு, நிலக்கடலை, எள் என்று தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உரத்தட்டுப்பாடு என்பது விவசாயிகளின் நம்பிக்கையை மெல்லச்சிதைத்து வருகிறது.
இதில் யூரியா என்பது பயிர்களின் ஆரம்ப வளர்ச்சிக்கும், இலைகளின் பசுமைத்தன்மைக்கும் தேவையான நைட்ரஜனை வழங்குகிறது. டிஏபி உரமானது வேர்கள் நன்கு ஆழமாக பரவவும், பூக்கள் மற்றும் காய்கள் பிடிப்பதற்கும் உதவுகிறது. பொட்டாஷ் உரமானது பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து, விளைச்சலின் தரத்தை உயர்த்துகிறது. இந்தவகையில் தற்போதைய காரீப் பருவ பயிர்களை வளர்த்தெடுக்க, தங்கு தடையில்லாத உரம் விநியோகம் என்பது பிரதானமாக இருக்க வேண்டும்.
இதை உணர்ந்து ஒன்றிய அரசானது பாகுபாடு காட்டாமல் தமிழக விவசாயிகளுக்கு உரங்களை வழங்கிட வேண்டும். மாநிலத்தில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசும், கடிதம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். காரீப் பருவம் என்பது இந்தியாவில் தென்மேற்கு பருவமழையை சார்ந்தது. இந்த பருவத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் விதைக்கப்படும் பயிர்கள், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அறுவடை செய்யப்படும்.
இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த உணவு தானியங்களின் பெரும்பகுதி, காரீப் பருவத்தில் தான் விளைகிறது. இது தமிழகத்திற்கும் பொருந்தும். எனவே இந்த காலக்கட்டத்தில் நிகழும் உரத்தட்டுப்பாடு என்பது, உணவு தானியங்களின் உற்பத்தியை அடியோடு குறைத்து விடும். இதை உணர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள் துரிதகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
உரத்தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் உரங்களின் விலை உயர்வு என்பதும் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி உர நிறுவனங்கள் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் மூட்டை உரத்தின் விலையானது ரூ.200 முதல் ரூ.650 வரை அதிகரித்துள்ளது. இதேபோல் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையும் அதிகரித்துள்ளது.
இப்படி விவசாயிகள் மீது ஏற்றப்பட்டுள்ள சுமையும், அவர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. எனவே இதில் அரசுகள் மெத்தனம் காட்டக்கூடாது. அப்படி இருந்தால் எதிர்காலத்தில் உணவு பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்கள் உருவாகும். எனவே பாதிப்புகள் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த மக்களுக்கும் தான் என்பதையும் ஒன்றிய, மாநில அரசுகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது முன்னோடி விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
