Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மறைமுக குட்டு

தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியானதாக உள்ளது. முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு மற்றும் அதிமுக எம்எல்ஏக்களாக தேர்வு பெற்ற 6 பேர் ராஜினாமா செய்த தொகுதிகள் இதில் அடங்கும். காலியான தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்தவகையில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராதவகையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றியை எட்டிப்பிடித்தது. தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.  இதன்பிறகு அதிமுகவில் ஏற்பட்ட கருத்து மோதலால் அங்குள்ள முக்கிய நிர்வாகிகள் பலர், தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்தனர்.

அங்கு உட்கட்சி பூசல் தீவிரமான நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தொடர்ந்து தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அதோடு ஆளுங்கட்சியான தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன் பின்னணியில் குதிரை பேரம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று வழக்குகளையும் தொடர்ந்தன. இந்தநிலையில் தான், சென்னை உயர் நீதிமன்றம், இடைத்தேர்தல் தொடர்பான முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதாவது திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு இம்மாதம் 31ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, மக்கள் பிரதிநிதிகள் மட்டுமன்றி மக்கள் மன்றத்திலும் விவாதங்களை எழுப்பியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மீது நம்பிக்கை இல்லாமல் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்ற சர்ச்சை, அவர் வேட்பாளராக தன்னை அறிவித்த நேரத்திலேயே துவங்கியது.

ஆனாலும் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு ெதாகுதியை பொறுத்தவரை மீண்டும் ஒரு தேர்தல் என்பது மக்கள் பணத்தை விரயமாக்கும் வீண்செலவு என்ற வாதம் வலுத்தது.

அதேநேரத்தில் அம்பாசமுத்திரத்தில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, கரூரில் வெற்றிபெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலையில் வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர், பெருந்துறையில் வெற்றிபெற்ற ஜெயக்குமார் ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது பெரும் அரசியல் பேரம் என்பது அம்பலமானது.

இப்படிப்பட்ட நிலையில் தான், மேற்கண்ட தொகுதிகளின் தேர்தல் வழக்குகள் காரணமாக இடைத்தேர்தல் நடத்த தடை விதித்துள்ளது உயர் நீதிமன்றம். இந்த தடை சுயநல அரசியல்வாதிகளுக்கு நீதிமன்றம் வைத்த மறைமுக குட்டு என்றே கருதுகிறது மக்கள் மன்றம்.