விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி வைத்த கோரிக்கையின் விளைவு ‘காக்கை உட்கார பனம் பழம் விழுந்த’ கதையாகிப் போனது. மக்கள் நலன் சார்ந்த அவசர நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் சட்டமன்ற விதி 110ஐ பயன்படுத்தி எம்எல்ஏக்கள் அனைவருக்கும் புதிய கார், அதற்கான செலவு படி, உதவியாளர் ஊதியம் உயர்வு விவரத்தை சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்வர் விஜய்.
பதவியேற்பு விழாவின் போது பொதுப்பணத்தில் யாரும் கை வைக்க விடமாட்டேன் என்றவர் இப்போது மக்களுக்கான தேவைகள் அதிகமிருக்கும் சூழலில் இப்படி யாருக்காக பொதுப்பணத்தில் கை வைக்கிறார் என காட்டமாகின்றன எதிர்க்கட்சிகள். தற்போதைய உறுப்பினர்களில் 190 பேருக்கு சொந்தக் கார் இருப்பதாக அவர்களது வேட்பு மனு ஆவணங்களிலிருந்து தெரியவருகிறது.
இயலாதவர்கள் கார் வேண்டுமென விரும்பினால் அதை நிறைவேற்ற அவர் சார்ந்த கட்சியின் நிதியிலிருந்து செலவிடலாம். மாநிலத்தின் நிதி நெருக்கடி பற்றி வெள்ளையறிக்கை வெளியிட்ட நிலையில், தங்கள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரும் விவசாயிகளின் மனதில் பால் வார்க்கும் அறிவிப்புகளுக்கு பதில் இப்படி கார் வாங்கும் அறிவிப்பு வெளியிட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவதால் முதலாமாண்டில் கார் வாங்கும் செலவும் அடுத்த 4 ஆண்டுகளில் பராமரிப்புக்கான செலவும் தனியாக தொடரும். ஐந்தாண்டு சட்டமன்றக் காலம் முடிந்து, அடுத்த தேர்தலில் ஒருவர் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பேரவைக்கு வந்தால் அவருக்கு மீண்டும் ஒரு கார் வழங்கப்படுமா? முதலமைச்சர் விஜய் அறிவித்தது போன்ற கார் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இருப்பதாகத் தகவலில்லை.
ஏற்கனவே தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய் கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவைச் சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் கார்களை பெற மாட்டோம் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். கார் வாங்கும் அளவுக்கு நிதி ஒதுக்கும் அரசு, ஏழை விவசாயிகளின் முழு கடன் தள்ளுபடி குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் நலன் காக்கப்பட வேண்டும் என பிரேமலதாவும், கார் தேவையில்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, காருக்கான நிதியை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் சேர்க்க வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரனும், பாமக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம்.
காருக்காக ஒதுங்கும் தொகையை பயன்படுத்தி, அந்தந்த தொகுதிகளில் விவசாயிகளுக்கான நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் குடோன்களை அமைத்துத் தர வேண்டும் என சவுமியா அன்புமணியும், மறைமுக மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு போன்றவற்றை சரி செய்யாமல் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட வேண்டுமென சீமானும் கேட்டுக்கொண்டனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கார் வைத்திருக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கார் கேட்டு விண்ணப்பிக்கப் போவதில்லை. எங்களின் நிலைப்பாடும் அது தான் என்று பதிலளித்தார். அப்படியென்றால் முதல்வரின் 110 விதி அறிவிப்பு யாருக்காக என்ற கேள்வியும், எம்எல்ஏக்கள் அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா இது என்ற எண்ணமும் சாமானியர்களுக்கு எழுந்துள்ளது இயல்பு.



