Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக சுபதீப் கோஷ் நியமனம்!

டெல்லி: இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக சுபதீப் கோஷை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது. 57 வயதான சுபதீப் கோஷ், இதற்கு முன்பு அப்பொப்பில் இருந்த திலீப்புக்குப் பதிலாக இந்த இடத்தைப் பெறுகிறார். ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்குப் பின் திலீப்பின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக காலி (Galle) நகரில் தொடங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் சுபதீப் கோஷ் தனது புதிய பணியைத் தொடங்கவுள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியின் கீழ் இந்திய அணிக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அசாம் மற்றும் ரயில்வே அணிகளுக்காக 17 முதல் தர போட்டிகளில் சுபதீப் கோஷ் விளையாடியுள்ளார். 1994 முதல் 2004 வரை உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற இவர், கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு பயிற்சியாளர் துறையில் வெற்றிகரமாக கால்பதித்தார். இந்திய கிரிக்கெட் கட்டமைப்பின் பல்வேறு மட்டங்களில் பணியாற்றி சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

அவரது மதிப்புமிக்க பயிற்சியாளர் அனுபவத்தில் அசாம் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர், தேசிய கிரிக்கெட் அகாதமி (NCA) மற்றும் இந்தியா 'ஏ' அணி, இந்திய பெண்கள் தேசிய அணி மற்றும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுடன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் ஆதரவு பணியாளர்களில் சமீபத்திய மாற்றங்களின் ஒரு பகுதியாக கோஷ் இந்த பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் இடம்பெற்றுள்ள பயிற்சியாளர் குழுவில் இவர் இணைவது குறிப்பிடத்தக்கது.